பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

630

என் சரித்திரம்

வழங்கி ஆதரித்த பெருவள்ளலை இறுதிக் காலத்தில் உடனிருந்து பார்க்க முடியாமல் ஊழ்வினை தடுத்துவிட்டதே என்ற ஏக்கம் தலைக் கொண்டது. உடனே ஒரு கார்டை எடுத்து அன்றிரவே புறப்பட்டு வருவதாக எழுதினேன். கீழே “இரவலரும் நல்லறமும் யானுமினி யென்பட நீத்து”ச் சென்றாயே என்ற கம்ப ராமாயண (ஆரண்ய காண்டம், சடாயு காண்படலம், 21) அடியை எழுதித் திருவாவடுதுறைக்கு அனுப்பினேன்.

அப்போது இந்த உலகத்தையே நான் மறந்தேன். அந்த நிமிஷத்திலேயே திருவாவடுதுறைக்குப் போக வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று.

இராமசுவாமி முதலியார் இந்தச் செய்தியை அறிந்து மிக்க வருத்தமடைந்தார். எனக்கு ஆறுதல் கூறினார். தேசிகருடைய உயர்ந்த குணங்களை எடுத்துச் சொன்னார். எனக்கோ துக்கம் பொங்கியது. அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.

இரங்கற் பாடல்கள்

நின்ற இடத்திலே நின்றேன்; ஒன்றும் ஓடவில்லை; புஸ்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை. என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்று விட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி, எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வது போல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்த மகோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன். என் துக்கத்தை ஆற்றிக் கொள்ள வழியில்லை. சில செய்யுட்கள் இயற்ற எண்ணினேன். என் உள்ளத்துயரமே செய்யுளாக வந்தது. அவர் திருவுருவத்தை இனிப் பார்க்க இயலாதென்ற நினைவு வரவே நான் மனத்திற் பதித்து வைத்திருந்த அவ்வுருவம் எதிர் நின்றது.

“கருணையெனுங் கடல்பெருகு மடையாய நினதுவிழிக்
      கடையுஞ் சீதத்
தருணமதி யனையமுக மண்டலமுந் தெளியமுத
      தாரை போல
வருமினிய மொழிவாக்கும் வருவோர்க்கு வரையாது
      வழங்கு கையும்
திருவருட்சுப் பிரமணிய குருமணியே காண்பதென்று
      சிறியேன் மன்னோ.”

[வரையாது-கணக்கின்றி.]