பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

669

என் சரித்திரம்

தண்டபாணி விருத்தம் முதலியன

கொழும்புத் துறையிலிருந்த அன்பராகிய தி. குமாரசாமி செட்டியாரென்பவர் அடிக்கடி எனக்குத் தம் அன்பு புலப்படக் கடிதம் எழுதி வந்தார். விநாயக புராணத்தை அச்சிட வேண்டுமென்று பல முறை எழுதினார். திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகரும் அதனை அச்சிட வேண்டுமென்று என்னிடம் அடிக்கடி சொன்னதுண்டு. அந்நூலைச் சில முறை ஆராய்ந்தேன் பதிப்பிக்கலாமென்று எண்ணியும் அதனை நிறைவேற்றும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

கொழும்புத் துறையைச் சார்ந்த இலந்தை நகரென்னுமிடத்தில் ஓராலயம் நிறுவி அதன் கண் தண்டபாணியைப் பிரதிஷ்டை செய்து உத்ஸவ விக்கிரகம் முதலியவற்றையும் குமாரசாமி செட்டியார் அமைத்தார். அவ்விரு மூர்த்திகளின் விஷயமாகச் சில செய்யுட்களை இயற்றித்தர வேண்டுமென்று விரும்பி எனக்கு எழுதினார். அவர் விருப்பப்படியே தண்டபாணி விஷயமாகப் பத்து விருத்தங்களும் உத்ஸவ மூர்த்தியாகிய ஸ்ரீ முத்துக்குமாரர் விஷயமாக ஓர் ஊசலும் எச்சரிக்கையும் ஐந்து கீர்த்தனங்களும் இயற்றினேன்.


“சேதிப் பரிய தவவொழுக்கச் செல்வம் வாய்ந்த குறுமுனிக்குச்
      
   செவ்வே தமிழி னிலக்கணத்தைச் செப்பி யருளி யொப்பில்லா
ஆதிச் சங்கத் திடைமேய வதனா லெம்மான் றமிழ்ப்பரம
   
   ஆசா னென்ப தறிந்தடைந்தே னகற்றா தளித்த னின்கடனே
சாதிப் பைம்பொற் றருவாதி தழைப்ப வொருமாப் பெருமுதலைத் தோய்

   தடிந்தே யரிமுன் னோர்துயரந் தணப்ப வரிமா முகற்றொலைத்

தாதிற் பொலிபூஞ் சோலைகளுஞ் சலச மலர்நீர் வாவிகளுந்
   தழைக்கும் வளமா ரிலந்தைநகர்த் தண்டபாணிப் பெருமானே”

என்ற செய்யுளால் தமிழ் நினைவு என் உள்ளத்தில் மீதூர்ந்து நின்றமை வெளிப்பட்டது.

கீர்த்தனங்களை இயற்றுவதற்குச் சங்கீதப் போக்கு நன்றாகத் தெரிய வேண்டுமென்று கோபால கிருஷ்ண பாரதியாரும் வையை இராமசாமி ஐயரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல்லவிக்கும் அநுபல்லவிக்கும் உள்ள இயைபு, சரணங்களின் பொருளும் பல்லவியின் பொருளும் தொடர்ந்து நிற்றல், சரணங்களில் முடுக்கு அமைய வேண்டிய முறை முதலிய செய்திகளை அவர்கள் மூலமாகவும்