பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயனற்ற பிரயாணம்

577

முறை போயிருந்தேன். வரகுண பாண்டியருடைய ஏட்டுச் சுவடிகளெல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாகக் கேள்வியுற்றேன். அந்த நினைவினால்தான் அத்தலத்திற்கு இரண்டாமுறை போகலானேன்.

நேரே கோயிலை அடைந்து பால்வண்ண நாதர் சந்நிதிக்குச் சென்றேன். வரகுண பாண்டியர் மிக எளிய நடையில் மனத்தை உருக்கும் வண்ணம் பாடிய பாடல்கள் தமிழன்பர்களுக்கு அப்பெருமானது நினைவை உண்டாக்கும். சந்நிதியில் நின்று,

“முன்னைப் பிறப்பின் தவப்பயனோ முழுது மறியா மூடனிவன்
என்னக் கருத்தில் இரங்கியோ யாதோ அறியேன் இரவு பகல்
கன்னற் பாகிற் கோற்றேனிற் கனியிற் கனிந்த கவிபாட
அன்னப் பழன வயற்கருவை ஆண்டா னென்னை ஆண்டதுவே”

என்ற பாடலைச் சொல்லி, “உன்னுடைய திருவருளைத் துணையென நம்பித் தமிழ்த் தொண்டை மேற்கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கும்படி செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு சுவடிகள் எங்கே உள்ளன வென்று விசாரிக்கலானேன். தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன். வரதுங்கராம பாண்டியருக்கு வருஷந்தோறும் ஆலயச் செலவில் சிராத்தம் நடந்து வருவதாகக் கேள்வியுற்றிருந்தேன். அது நடந்து வருகிறதா என்று கேட்டேன்.

நடந்து வருவதாக அவர் சொன்னார்.

நான்:— வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் ஆலயத்திலே இருக்கின்றனவாமே?

அவர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற்கூளம் மாதிரி கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

நான்: அப்படியா! அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த இடத்திற்கு அழைத்துப் போவீர்களா?

அவர்: அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுணபாண்டியர் இறந்த பிறகு அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் அப்போது தான் கோவிலுக்கு வந்தனவாம்.