பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

690

என் சரித்திரம்

ஏட்டுச் சுவடிகள் இருக்குமிடத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்ததை ஞாபகப்படுத்தினேன். அவர் “இருங்கள்” என்று சொல்லி உள்ளே சென்று ஒரு சுவடியைக் கொணர்ந்து கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தேன். சிலப்பதிகார மூலமும் மணிமேகலை மூலமும் அதில் இருந்தன. சிலப்பதிகாரத்தைப் புரட்டிப் பார்த்தேன். மூலம் முற்றும் இருந்தது. பிரதி மிகவும் திருத்தமாகக் காணப்பட்டது.

“இந்தச் சுவடி எங்கே கிடைத்தது?” என்று கேட்டேன்.

“இங்கே அருகில் முதலைப்பட்டி என்ற ஊரில் ஒரு கவிராயர் வீடு இருக்கிறது. அங்கே நூற்றுக் கணக்கான ஏடுகள் உள்ளன. அங்கிருந்து எடுத்து வந்தேன்” என்றார் அவர்.

“முதலைப்பட்டியா? விசித்திரமான பெயராக இருக்கிறதே!” என்று நான் கேட்டபோது அவர், “இப்போது முதலைப்பட்டி என்று வழங்குகிறார்கள்; மிதிலைப்பட்டி என்ற பெயர்தான் அப்படிப் பேச்சு வழக்கில் மாறிவிட்டது” என்றார்.

எனக்கு உடனே அந்த ஊருக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று.

“இங்கிருந்து அவ்வூர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்று கேட்டேன்.

அவர் என் குறிப்பை அறிந்து கொண்டு, “அருகில்தான் இருக்கிறது. போகலாம்” என்றார்.

மிதிலைப்பட்டி

அன்று பிற்பகலே ஆதீனகர்த்தர் உத்தரவு பெற்று அப்பாப் பிள்ளையுடன் மிதிலைப்பட்டி சென்று அந்தக் கவிராயர் வீட்டை அடைந்தேன். அப்போது அங்கே இருந்த கவிராயரின் பெயர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பது. அவரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டிலுள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தேன். அவர் வீடு தமிழ் மகள் ஆலயமாகத் தோற்றியது. அவர் தம்முடைய முன்னோர்கள் பெருமையை எடுத்துரைத்ததோடு அவர்கள் இயற்றிய பாடல்கள் பலவற்றையும் சொல்லிக் காட்டினார்.

அவர்களுடைய முன்னோர்கள் முன்பு சேலத்தைச் சார்ந்த ஓரூரில் வாழ்ந்திருந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் தாரமங்கலம் கோயிலில் திருப்பணி செய்த கட்டியப்ப முதலியாருடைய ஆதரவில் இருந்தார்கள். அந்தக் கவிராயர்கள் பரம்பரையில் அழகிய