பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/719

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

692

என் சரித்திரம்

பெயர் வந்ததென்பது விளங்காமலே இருந்தது. மிதிலைப்பட்டியில் கிடைத்த பிரதியிற் பயகரமாலை என்ற பெயர் இருந்தது கண்டு உண்மை விளங்கியது. பயத்தை நீக்கும் மாலை என்னும் பொருளைத் தரும் பயஹரமாலை, பயங்கர மாலையாகி அச்சேறியதை நினைந்து சிரித்தேன். அந்நூலை இயற்றியவர் வீரபத்திரக் கம்பரென்ற புலவரென்று அப்பிரதியால் தெரிய வந்தது. எனக்கு அந்த வீட்டை விட்டு வர மனமில்லை அழகிய சிற்றம்பலக் கவிராயரை, “இன்னும் இந்தப் பக்கங்களில் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும் இடம் இருந்தால் சொல்லவேண்டும்” என்றேன், அவர், “இங்கே அருகில் செவ்வூரில் உறவினர் இருக்கின்றனர். எங்கள் பரம்பரையிலிருந்து ஒரு கிளை அங்கே போயிருக்கின்றது. அங்கும் இவற்றைப் போன்ற ஏடுகளைக் காணலாம். மற்றொரு கிளை காரைச்சூரான்பட்டியில் இருக்கிறது. இப்போது கடுங்கோடையாக இருப்பதால் அங்கே உங்களால் போவது சிரமம்” என்றார். புதையல் இருக்குமிடத்தை ஒருவர் எனக்குச் சொல்லியிருந்தால் அவ்வளவு சந்தோஷம் உண்டாகியிராது; அவ்வளவு மகிழ்ச்சியில் மூழ்கினேன்.

கவிராயரிடம் புறநானூற்றையும் பயகர மாலையையும் மூவருலாவையும் வேறு சில நூல்களையும் பெற்றுக்கொண்டு செவ்வூருக்குப் போனேன். அங்கே சென்று தங்கியவர்களில் முன்னோர் சிற்றம்பலக் கவிராயர் என்பவர். சேதுபதியின் மீது தளசிங்கமாலை என்னும் பிரபந்தம் செய்தவர் அவர். அவர் வீட்டிலும் பல சுவடிகள் இருந்தன. ஆனால் சிலப்பதிகாரப் பிரதியைக் காணவில்லை. ஏதோ ஒரு சுவடியில் மூன்று சங்கங்களையும் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்கும் ஒரு பெரிய அகவல் இருந்தது. அதனைப் பார்த்துப் பிரதி செய்து கொண்டேன். இந்தப் பிரயாணத்தில் அப்பாப் பிள்ளையின் சல்லாபத்தை மிகுதியாகப் பெற்றேன். அவர் சிலேடையாகப் பேசுவது மிக அருமையாகவும் அழகாகவும் இருக்கும். அதனால் பொழுது போனதே தெரியவில்லை.

மருத பாண்டியர் புகழ்

செவ்வூரிலிருந்து குன்றக்குடிக்கு வந்து ஆதீன கர்த்தரிடம் மிதிலைப்பட்டியின் சிறப்பைப் பற்றித் தெரிவித்தேன். அப்படியே சிறுவயல் சென்று அவ்விடத்து ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவரைப் பார்க்க எண்ணிப் புறப்பட்டேன். வரவேண்டுமென்று பல முறை அவர் தெரிவித்ததுண்டு, அவர் சங்கீதத்திலும், தமிழிலும் வடமொழியிலும் விசேஷமான அபிமானமுடையவர். தெலுங்கில் நல்ல பழக்கமுள்ளவர். இராமலிங்கம்பிள்ளை என்ற