பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்க் கோயில்

693

தமிழ் வித்துவானும் திருக்கோஷ்டியூர் சாமிநாத சாஸ்திரிகள் என்ற ஸம்ஸ்கிருத பண்டிதரும் அவருடைய ஆஸ்தான வித்துவான்களாக இருந்தனர்.

என்னுடைய வரவினால் மிக்க மகிழ்ச்சி கொண்டு ஜமீன்தார் பலவாறு உபசரித்தனர். குன்றக் குடியைச்சார்ந்த இடங்களிலெல்லாம் ஜனங்கள் மருதபாண்டியரைப் பற்றிய வரலாறுகளையும் கொடையையும் பாராட்டியும் அவரைப்பற்றிய தனிப்பாடல்களைச் சொல்லியும் இன்புற்றனர்.

சிறுவயல் ஜமீன்தாரும் பல வரலாறுகளைச் சொன்னார். “நான் வசித்துவரும் இந்த மாளிகை மருதபாண்டியர் இருந்த அரண்மனையாகும். அதனால் இவ்வூருக்கு அரண்மனைச் சிறுவயலென்னும் பெயர் உண்டாயிற்று. சிவகங்கை ஸமஸ்தானத்துத் தலைவர்களுள் அவரைப் போலப் புகழ் பெற்றவர் சிலரே. தம்முடைய வீரத்தால் ஸமஸ்தானத் தலைமையை அவர் பெற்றார். அவர் மிக்க தெய்வ பக்தியை உடையவர். பல ஸ்தலங்களில் அவர் திருப்பணி செய்திருக்கிறார். முக்கியமாகக் குன்றக்குடியில் சில மண்டபங்களைக் கட்டியிருக்கிறார். அவரால் செப்பம் செய்யப்பட்ட திருக்குளம் மருதாபுரி என்ற பெயரோடு இப்போதும் விளங்குகிறது. அவருடைய ஆஸ்தானத்தில் இருபத்தொரு தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள். அவரைப் பாராட்டி அவர்கள் பாடிய செய்யுட்கள் பல உண்டு.” ஜமீன்தார் மருத பாண்டியருடைய கல்வியிலும் கொடையிலும் வீரத்திலும் ஈடுபட்டவராதலின் மணிக்கணக்காக அவர் புகழை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார். நான் சிலப்பதிகாரம் பதிப்பிக்க எண்ணியிருப்பது தெரிந்து, தம்மாலான பொருளுதவி செய்வதாகச் சொன்னதோடு என்னால் அனுப்பப் பெற்றவரும் தம் ஆஸ்தான வித்துவானுமாகிய திருமானூர்க் கிருஷ்ணையரை எந்தச் சமயத்தில் வேண்டுமானலும் வருவித்து உபயோகித்துக் கொள்ளலாமென்றும் சொன்னார்.

நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு மிதிலைப்பட்டி, செவ்வூரென்னும் இரண்டிடங்களிலும் கிடைத்த சுவடிகளோடு கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

மிதிலைப்பட்டிப் பிரதியை வைத்துக்கொண்டு பார்த்ததில் சிலப்பதிகாரம் பல இடங்களில் திருத்தமடைந்தது. பல இடங்களில் பாடல்களுக்குத் தலைப்புகள் இருந்தன. அந்தப் பிரதியை ஆராய ஆராய மிதிலைப்பட்டியின் சிறப்பு மேலும் மேலும் புலப்பட்டது.