பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

698

என் சரித்திரம்

சமயங்களில் சில தமிழ்ச் செய்யுட்களுக்குப் பொருள் தெரிவிக்கும்படி கடிதங்கள் எழுதியதுண்டு. அந்தச் செய்யுட்கள் கடினமானவையாகவும் பாடம் கேட்டவர்களுக்கல்லாமல் ஏனையோருக்கு எளிதில் விளங்காதனவாகவும் இருக்கும் “ஒரு ஜமீன்தார் இப்படிக் கடினமான செய்யுட்களைத் தேர்ந்தெடுத்துச் சந்தேகம் கேட்கிறாரே. மற்றச் செய்யுட்களெல்லாம் விளங்கி விட்டனவா? அவற்றைப் படிக்கிறாரா?” என்று சிந்தனை செய்வேன். நேரிலே ஜமீன்தார் புலவர்களோடு இருந்து தமிழ் நூல்களைப் படித்து இன்புறுவதைக் கண்டபோது அவருடைய தமிழ்ப் பயிற்சியின் அளவை ஊகித்துக் கொண்டேன்.

ஒரு புலவர் ஒரு பாடலைப் படித்தார். உடனே மருதப்பத் தேவர், “உத்தரவாக வேணும்” என்று என்னை நோக்கிக் கூறினார். நான் ஸ்தம்பித்துவிட்டேன். அவருடைய பேச்சிலே காணப்பட்ட விநயந்தான் அதற்குக் காரணம்.

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து”

என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதற்கு இலக்கியமாக இருந்தார் ஜமீன்தார் நான் என்ன ஆசாரியனா? வயசில் முதிர்ந்தவனா? ‘உத்தரவாகவேணும்’ என்று சொன்ன வார்த்தையிலே அவருடைய பெருந்தன்மையும், தமிழிலுள்ள கரை கடந்த அன்பும் தொனித்தன ‘பழங்காலத்தில் வீரமும் கொடையும் கல்வியுமுடையவராக இருந்த சிற்றரசர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ!’ என்று நான் நினைத்து உள்ளத்துள் அவரைப் பாராட்டினேன். அந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லத் தொடங்கினேன். அத்தகைய ரஸிகர்களும் இடமும் காலமும் கிடைக்கும்போது எனக்கு உண்டாகும் உத்ஸாகத்துக்கு அளவு ஏது? கருத்து, பதப் பொருள், விசேஷ உரை எல்லாம் சொல்லி எழுத்து முதலிய ஐந்து இலக்கணச் செய்திகளையும் அமைத்துச் சொன்னேன். எழுதுசித்திரம் போலிருந்து ஜமீன்தார் கேட்டார். மேலே இரண்டு பாடல்கள் நடந்தன. மணி பத்து அடித்தது. புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு ஜமீன்தார் எழுந்தார். “இதுவரையிலும் அனுபவிக்காத பேரானந்தத்தை இன்று அனுபவித்தேன். நேரமாயிற்று போய்ப் போஜனம் செய்து கொள்ள வேண்டும்” என்று உபசரித்தார்.

மத்தியான்னம் எனக்குக் கிடைத்த விருந்தமுதத்தை தமிழ் நினைவோடு உண்டு மகிழ்ந்தேன். நான் கண்ட காட்சிகளெல்லாம்