பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

702

என் சரித்திரம்

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன். வண்டி சித்தமாக இருந்தது. மறுபடியும் ஒருமுறை ஜமீன்தாரைப் பார்க்க வேண்டுமென்று தோற்றியது, போய்ப் பார்த்தேன். என்னைக் கண்டவுடன் அவர் திடுக்கிட்டு, “என்ன விசேஷம்? வண்டி வரவில்லையா?” என்றார்.

“எல்லாம் வந்து விட்டன. சமுகத்தைப் பிரிவதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. தமிழ்த் தொண்டு முன்னே இழுக்கிறது. ராத்திரி நான் பால் அருந்தியபோது சமுகத்தின் அன்பை நினைந்து மனங்கசிந்தேன். மறுபடியும் பார்த்து விட்டுப் போக வேண்டுமென்ற ஆசையால் வந்தேன். விடைபெற்றுக் கொள்ளுகிறேன்” என்று சொல்லி நின்றேன்.

“நமக்கும் வருத்தமாகவே இருக்கிறது. எந்தச் சமயத்தில் ஓய்வு நேருமோ அப்போதெல்லாம் வந்து இங்கே தங்கி எங்களுக்குத் தமிழமுதை ஊட்டலாம்” என்று அவர் அன்பு கனியச் சொன்னார்.

விடை பெற்றுப் பிரிந்தேன். அன்று அவரைக் கண்டதுதான்; பிறகு அவரைக் காணமுடியாமல் விதி செய்துவிட்டது.

என் உள்ளத்தை ஹிருதயாலய மருதப்பத் தேவரிடம் வைத்து விட்டுத் திருக்குற்றாலத்தை அடைந்தேன்.


அத்தியாயம்—114

சிலப்பதிகாரப் பதிப்பு

திருக்குற்றாலத்திற்குப் போன போது மேலகரத்திலிருந்து திரிகூடராசப்பக் கவிராயர் அங்கே வந்திருந்தார். அவரைக் கண்டவுடன் அந்தப் பக்கங்களில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று ஏடு தேடலாமென்ற ஊக்கம் ஏற்பட்டது. “நான் ஊற்றுமலை போய் வந்தேன். கும்பகோணம் போனவுடன் சிலப்பதிகாரத்தை அச்சிட ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் சுவடிகள் கிடைக்கக் கூடிய இடங்களுக்கு உங்கள் துணையைக் கொண்டு சென்று பார்த்து வர எண்ணுகிறேன்” என்றேன்.

அவர், “அப்படியே செய்யலாம்” என்றார்.