பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

706

என் சரித்திரம்

நாளாக ஆக உண்டான ஆராய்ச்சிப் பழக்கமும் பண்டைத் தமிழ் நூலறிவும் புதிய புதிய முறைகளைத் தோற்றுவித்தன. சிந்தாமணிப் பதிப்பைக் காட்டிலும் பத்துப் பாட்டிற் சில புதிய பகுதிகளைச் சேர்த்தேன். அதைக் காட்டிலும் சிலப்பதிகாரத்தில் இன்னும் சில பகுதிகளை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு உதவியாகச் சேர்க்க வேண்டுமென்று தோற்றியது. அவற்றிற்குரிய விஷயங்கள் சிலப்பதிகார மூலத்திலும் உரையிலும் பல இருந்தன. அடியார்க்கு நல்லார் உரையினால் தெரியவரும் நூல்களைப் பற்றிய குறிப்புக்களை அவசியம் எழுத வேண்டுமென்ற ஆசை எனக்கு மிகுதியாக எழுந்தது. நூலாலும் உரையாலும் அறியப்படும் அரசர் முதலியோர் பெயர்களை வகைப்படுத்தி அகராதி வரிசையில் அமைக்க வேண்டுமென்பது மற்றொரு விருப்பம். இப்படி என்னுடைய ஆராய்ச்சி வகை விரிந்து கொண்டே சென்றது. தனித்தனியே விஷயங்களைப் பிரித்து வகைப்படுத்தி ஒவ்வொரு தலைப்பிட்டுத் தொகுத்து அகராதி வரிசையாக எழுதச் செய்தேன். என்னுடன் இருந்து உழைத்த மாணாக்கர்களும் அன்பர்களும் இந்த வேலையில் துணையாக இருந்தார்கள். காங்கேயம் ஜே. வி. சுப்பிரமணிய ஐயர் என்ற மாணாக்கர் மிகுதியான உதவியைச் செய்தார்.

பதிப்புக்குரிய ஆராய்ச்சி

அரும்பதங்களையெல்லாம் தொகுத்து அகராதியாக எழுதிக் கொண்டேன். அரிய விஷயங்களையெல்லாம் ஒன்றாக்கி விஷய சூசிகை என்ற தலைப்பிட்டுத் தனியே ஓர் அகராதி சித்தம்செய்தேன். இப்படியே நூலாலும் உரையாலுந் தெரிந்த அரசர்கள், நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள் பெயர்களுக்குத் தனித்தனியே அகராதியும் அடியார்க்கு நல்லாருரையிற் கண்ட நூல்களுக்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதி முடித்தேன்.

சிலப்பதிகாரக் கதைச் சுருக்கமும், இளங்கோவடிகள் வரலாறும், அடியார்க்கு நல்லார் வரலாறும், மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புக்களும் எழுதப் பெற்றன.

எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு முகவுரையை எழுதத் தொடங்கினேன். முந்தின நூற்பதிப்புக்களில் நூல் அச்சாகும் காலத்தில் முகவுரையை எழுதினேன். இதற்கு முதலிலே எழுதி விட்டால் பிறகு வேண்டியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமென்றெண்ணினேன்.