பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/751

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

724

என் சரித்திரம்

“பைபிள் சிறியதாக அல்லவா இருக்கும்? இது மிகப் பெரியதாக இருக்கிறதே!” என்றேன்.

“இது பைபிளில் ஒரு விசேஷப் பதிப்பு. பைபிளிலுள்ள விஷயங்களைத் தொகுத்து வகைப்படுத்தி ஒரே மாதிரியான சொல்லும் கருத்தும் உள்ள பகுதிகளை அங்கங்கே காட்டிப் பதிப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடுவிலே தனியே இந்த ஒப்புமைப் பகுதி இருக்கிறது. இதை, ‘கன்கார்டன்ஸ்’ (Concordance) என்று இங்கிலீஷில் சொல்வார்கள்” என்று சொல்லி அதைப் பிரித்துக்காட்டினார்.

அந்த ஒப்புமைப் பகுதிகளில் பலவகை எண்கள் காணப்பட்டன. அப்புத்தகத்தில் அதைத் தொகுத்தவர் படமும் அவருக்கு உதவியாக இருந்தவர் படமும் இருந்தன.

“இந்த ஒப்புமைப் பகுதியால் என்ன பிரயோசனம்?” என்று கேட்டேன்.

“பைபிளில் ஒரே செய்தி பல இடங்களில் வருகிறது. ஒரே விதமான சொற்றொடர்களும் வருகின்றன. அவற்றைத் தொகுத்து வைத்து ஆராய்ந்தமையால் சில விஷயங்களின் உண்மையான பொருளும் சில சொற்களின் திருத்தமான உருவமும் புலப்பட்டனவாம். பைபிளில் ஏறியிருந்த பிழையான பாடங்கள் இந்தச் சோதனையினால் திருத்தமடைந்தனவாம்” என்று அவர் எனக்கு விளக்கினார்.

அப்போது எனக்குப் புறநானூற்று ஆராய்ச்சியில் புது முறை ஒன்று தோற்றியது. புறநானூற்றிலுள்ள விஷயங்களையும் சொற்களையும் முதலிலே அகராதியாகச் செய்துகொண்டு ஆராய்ச்சி செய்தால் உண்மையுருவத்தைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருக்குமென்று அறிந்தேன். அங்ஙனமே செய்து வைத்துக் கொண்டேன்.

ஆராய்ச்சிக்குரிய கருவிகள்

ஒரு நூலைத் திருத்தமாகப் பதிப்பிக்க வேண்டுமென்றால் பல வகையான கருவிகளை முதலில் அமைத்துக் கொள்ளவேண்டும். ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது மட்டும் போதாது. ஏட்டில் இருப்பது அவ்வளவும் திருத்தமாக இராது. பல காலமாகப் பிழையாகவே வழங்கி வந்த பாடங்களை அவற்றிற் பார்க்கலாம்; அவற்றுள் இதுதான் சுத்த பாடம் என்று தெரிந்து கொள்வதற்குப் படும்