பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/771

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

744

என் சரித்திரம்

விரிவுபடுத்தி, தமிழ், ஸம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் பாஷைகளில் உள்ள பலவகையான அச்சுப் புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டு மென்று எண்ணினார். புத்தகசாலைக்குரிய இடமாக ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டுவித்தார். இப்போது ஸரஸ்வதி மஹால் என்று வழங்குவது அதுவே.

புத்தக சாலைக்கு வேண்டிய புத்தகங்களை வாங்குவதற்காகத் தேசிகர் என்னைச் சில காரியஸ்தர்களுடன் சென்னைக்கு அனுப்பினார்.

மற்றொரு வேலையையும் என்பால் அவர் ஒப்பித்தார். இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி சில முறை திருவாவடுதுறைக்கு வருவதாக இருந்தது எப்படியோ நின்று விட்டது.

அவரை ஒரு முறையேனும் மடத்துக்கு அழைத்து வரவேண்டுமென்ற ஆவல் மடத்தைச் சார்ந்தவர்களுக்கு இருந்தது. நான் புத்தகங்கள் வாங்கும் பொருட்டுச் சென்னைக்குச் செல்ல எண்ணிய காலத்தில் ஸேதுபதி சென்னையிலிருந்தார். “இந்தச் சமயத்தில் அவர்களைக் கண்டு எப்படியாவது இங்கே வரும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பு உங்களைச் சார்ந்தது” என்று அம்பலவாண தேசிகர் என்னிடம் சொன்னார்.

நான் சென்னைக்கு வந்து முதற்காரியமாகப் பாஸ்கர சேதுபதி மன்னரைப் பார்த்தேன். தமிழ் நயந்தேரும் அவர் மிகவும் பிரியமாகப் பேசிக்கொண்டிருந்தார். நான் வந்த காரியத்தைத் தெரிவிக்கவே அவர் ஒப்புக்கொண்டார். உடனே அந்தச் சந்தோஷச்செய்தியை அம்பலவாண தேசிகருக்குக் கடிதவாயிலாகத் தெரிவித்தேன். பிறகு புத்தக சாலைக்கு 5000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டன. பல பாஷைகளிருலுமுள்ள புத்தகங்களை வாங்கினோம். வை. மு. சடகோபராமானுஜாசாரியர் புத்தகம் வாங்கும் விஷயத்தில் உடனிருந்து உதவி செய்தார். புத்தகங்களையெல்லாம் ரெயில்வே கூட்ஸ் மூலம் திருவாவடுதுறைக்கு அனுப்பச் செய்தேன்.

மணி ஐயர் தரிசனம்

அப்போது மணி ஐயர் ஹைகோர்ட்டு ஜட்ஜாக நியமனம் பெற்றிருந்தார். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரைக் கண்டு ஊக்கமடைந்து வருவது வழக்கம்: அந்த முறை சந்தோஷம் விசாரிக்கச் சென்றேன். “புறநானூறு மிகவும் நன்றாயிருக்கிறது. இப்போது என்ன நடக்கிறது?” என்று என்னைக் கண்டவுடன் அவர் கேட்டார். புறநானூற்றுப் பிரதியை அவர் பெற்று எனக்குப் பணமும் முன்பு அனுப்பியிருந்தார்.