பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/789

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

765

என் சரித்திரம்

ஒரு பெரும் பட்டப் பெயர் இவருக்குச் சூட்டி அன்பு பாராட்டுவார்களென நம்புகின்றனம். அங்ஙனம் செய்யாரேல் அவர்கள் செய்ந்நன்றி கொன்றவரே யாவர். ஐயரவர்களின் முயற்சியின் பலனாக அடுத்த ஜன்மத்தில் ஐயர் புத்த குருவாக விளங்கினும் விளங்குவர். அங்ஙனமே பௌத்த சமய போதிநாதன் ஐயரவர் கட்கு அருள் புரிவாரென்பது நிச்சயம்.”

என்பால் இவ்வளவு மதிப்புடைய அவ்வன்பருடைய கட்டுரையைக் கண்டு நான் நகைத்தேன். அவருடைய ஸ்துதி நிந்தை எனக்கு வருத்தத்தை உண்டாக்கவில்லை. சிந்தாமணி முதலியவற்றையும் பௌத்த நூல்களின் வரிசையிலே சேர்க்கும் இந்த ஆனந்தருக்குத் தமிழ் நூல்களில் எவ்வளவு அன்பு உண்டென்பதை நானா சொல்லவேண்டும்?

என்னுடைய அன்பர்கள் இதைக் கண்டு சிரித்தார்கள். ‘பௌத்த சமயப் பிரபந்தப் பிரவர்த்தனாசாரியர்’ என்று எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த அப்பட்டத்தை நான் பெட்டியில் வைத்துப் போற்றி வந்தேன். வெளியிடும் சந்தர்ப்பம் இப்போதுதான் வாய்த்தது. முன்னே சிந்தாமணி பதிப்பித்த காலத்தில் ஒரு ஜைனப் பெண்மணி என்னை ‘பவ்ய ஜீவன்’ என்று அன்போடு அழைத்ததனால் நான் ஜைனனாகவில்லை. இப்போது இவர் குறிப்பாகப் புத்த சமய குருவென்றதால் நான் பௌத்தனாகவில்லை.

மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, பெருங்கதை என்பவற்றில் என் கருத்தைச் செலுத்தலானேன்.