பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

யாகச் சரிதப்பகுதி வெளிவரவில்லை, சரித்திர சம்பந்தமான பல வகைக் குறிப்புக்களை அவர்கள் தொகுத்து வைத்துள்ளார்கள். 122 அத்தியாயங்கள் வரை சுயசரிதமாக வந்த பகுதியே இப் பதிப்பில் வெளியிடப் பெற்றுள்ளது. தமிழன்பர்கள் அடிக்கடி சரித்திரப் பதிப்பைப்பற்றி நேரிலும் கடிதம் மூலமாகவும் வினவி வந்தனர். காகிதக் கட்டுப்பாடு முதலிய காரணங்களால் புத்தகவடிவத்தில் பதிப்பு வெளிவரத் தாமதமாயிற்று.

இப்பொழுது ஸ்ரீ காசிமடத்து அதிபர்களாக விளங்கும் அருங்கலை வினோதர்களும் பேரறச் செயல்கள் புரிந்து வருபவர்களுமாகிய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் ஸ்வாமிகள் அவர்கள் ஐயரவர்கள் சரித்திரம் வெளிவர வேண்டுமென்று அடிக்கடி என்னை நினைவுபடுத்தி வந்ததோடு நன்கொடையும் அளித்து உதவினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுயசரிதத்தை ஆனந்தவிகடனில் பதிப்பிக்கச் செய்தும். புத்தக வடிவில் வெளிவருவதற்கு உடன்பட்டுப் படங்கள் சம்பந்தமான ப்ளாக்குகள் முதலியவற்றை முன்னரே அனுப்பச் செய்தும் உதவிய "ஆனந்தவிகடன்" உரிமையாளராகிய ஸ்ரீமான் S. S. வாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியறிவைச் செலுத்துகின்றேன்.

வழக்கம்போல் ஊக்கத்துடன் இப்புத்தகத்தைத் திறம்பட அச்சிட்டுக் கொடுத்த கபீர் அச்சுக்கூடத்தார் பாராட்டுக்குரியர்.

இச்சுயசரிதப் பகுதியில் ஆசிரியர்கள், தமிழ்ப் புலவர்கள் ஊர்ப் பெயர்கள் முதலியன மிகுதியாக வந்துள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளையும் சிறப்புப் பெயர்களையும் வரிசைப்படுத்தி அமைத்து அவை அகராதியாகச் சேர்க்கப் பெற்றுள்ளன.

ஐயரவர்கள் எழுதிய சுயசரிதம் மணிமேகலைப் பதிப்பு வெளிவந்த வரலாற்றோடு (1898) முடிவடைகிறது.

பின் நிகழ்ச்சிகள் சம்பந்தமான குறிப்புக்கள் ஒழுங்குபடுத்தி வைக்கப்பெற்றுள்ளன. திருவருள் துணை கொண்டும் அன்பர்கள் உதவி கொண்டும் "என் சரித்திரத்'தின் தொடர்ச்சியாக ஐயரவர்கள் வரலாற்றைப் பூர்த்தி செய்து வெளியிடலாமென்று கருதியுள்ளேன்.

"தியாகராச விலாஸம்" இங்ஙனம்
S. கலியாணசுந்தர ஐயர்

திருவேட்டீசுவரன் பேட்டை

4—4—1950