பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

என் சரித்திரம்

சடகோபையங்கார் பரம்பரை

சடகோபையங்கார் பரம்பரையாக வித்துவான்களாக இருந்தோர் மரபிற் பிறந்தவர். அவர் பரம்பரையினர் யாவருக்கும் சண்பக மன்னார் என்ற குடிப்பெயர் உண்டு. அவர்கள் தென்கலை ஸ்ரீவைஷ்ணவர்கள். அவர்களிற் பலர் சிறந்த கவிஞர்களாக விளங்கினர். அவர்களுக்குப் பாலஸரஸ்வதி, பாலகவி என்னும் பட்டங்கள் உண்டு. அவர்களில் ஒருவர் ‘திருக்கல்யாண நாடகம்’ என்பதையும் மற்றொருவர் ‘சிவராத்திரி நாடகம்’ என்பதையும் இயற்றியிருக்கின்றனர். சடகோபையங்காருடைய பட்டனாராகிய ஸ்ரீநிவாசையங்கார் என்பவர் சிறந்த ஞானி. அத்வைத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். தமிழ்ப் புலமையும் மிக்கவர். அவர் நவராத்திரி நாடகம், சாரங்கபாணி நொண்டி நாடகம் முதலியவற்றை இயற்றியிருக்கிறார். அவருக்கு அவர் குடிப்பெயராகிய சண்பக மன்னாரென்பதே இயற்பெயரைப் போல வழங்கி வந்தது. அவரிடம் வேதாந்த சாஸ்திரங்களைப் பாடங்கேட்குத் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் அங்கங்கே உள்ள ஊர்களில் மடங்களை அமைத்துக்கொண்டு அடக்கமாகக் காலங் கழித்து வந்த பரதேசிகள் பலர். அவரும் அரியிலூரில் தமக்கென ஒரு மடம் கட்டி அங்கேயே இருந்து பாடஞ் சொல்லி வந்தார். பிற்காலத்தில் அவருடைய குரு பூஜை அரியிலூரிலும் அவர் மாணாக்கர்கள் இருந்த இடங்களிலும் வருஷந்தோறும் நடந்து வந்தது. அவர் பேரராகிய சடகோபையங்காரை உட்கார வைத்து அந்தக் குரு பூஜையில் சண்பக மன்னாராகப் பாவித்து வழிபடுவார்கள்.

ஐயாவையங்கார்

சண்பக மன்னாருடைய மூத்த குமாரராகிய ஐயாவையங்கார் ரென்பவரே சடகோபையங்காருடைய தந்தையார். அவரிடம் பரம்பரை இயல்புகளாகிய தமிழ்ப் புலமையும் துறவுணர்ச்சியும் விளங்கின. ஜமீன்தாரது ஆஸ்தான வித்துவானாக அவர் சில காலம் இருந்தார். தியானம் செய்தல், தெய்வ கைங்கரியம் புரிதல் முதலியவற்றிலேதான் அவர் அதிகமாக ஈடுபட்டிருந்தார். அதனால் மற்றவர்களைப் போல ஜமீன்தாருக்குத் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ள முடியவில்லை. தம்முடைய வயிற்றுக்காக ஆத்ம நாயகனது கைங்கரியத்திற்குக் குறை உண்டாக்கிக் கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. இறுதியில் ஜமீன் உத்தியோகத்தை விட்டுவிட்டு ஆண்டவன் அடித்தொண்டே கதியென்றெண்ணி அதில் முனைந்து நின்றார்.