பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

என் சரித்திரம்

கல்வி இன்பமும் வறுமை நிலையும்

கல்வியின்ப மொன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர் வறுமைநிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. அரியிலூர் ஸமஸ்தானத்தில் நிலை வர வர க்ஷீணமடைந்தமையால் அவருக்கு அதன் ஆதரவு குறைந்து போயிற்று தம் சிஷ்யர்களது உதவியைக்கொண்டே அவர் ஜீவனம் செய்து வந்தார்.

குளிருக்குப் போர்த்திக்கொள்ளத் துப்பட்டி இல்லை. அதற்காக மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை என்பவருக்கு ஒரு பாட்டு எழுதி அனுப்பினார்.

“துப்பட்டி வாங்கித் தரவேண்டும் லிங்க துரைசிங்கமே”

என்பது அதன் இறுதி அடி. அந்தக் கனவான் ஒன்றுக்கு இரண்டு துப்பட்டிகளை வாங்கி அனுப்பினார்.

மாலை வேளையில் அவர் கடை வீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடைய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும். அவர் செல்லும்போது அவரைக் கண்டு ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் இருக்கச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்புக் காணிக்கையை ஐயங்கார் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக் கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது; இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உலகமே வேறு, அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை. அந்த உலகத்திற்கு அவர் என்னையும் இழுத்துக் கொண்டார்.

அவர் ஊட்டிய தமிழமுதம்

எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஒரு தனியான சுவை உண்டாகும்படி சொல்வது அவர் வழக்கம். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுட்களே சொல்வார். ஆயினும் அச்செய்யுட்களின் பொருளை நல்ல உதாரணங்களோடும் உபகதைகளோடும் தெளிவாகச் சொல்லி மனத்தில் நன்றாகப் பதியும்படி செய்வார்.