பக்கம்:என் சுயசரிதை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கிறேன். ஆயினும் அவைகளை முதன் முதல் நான் பார்த்த போது எனக்குண்டான சந்தோஷம் பிறகு கிடைக்கவில்லை. என்னுடைய 21-வது வயதில் (எனக்கு ஞாபகமிருக்கிறபடி) என் தகப்பனார் எனக்கு சிவதீட்சை செய்துவைத்தார் எங்கள் குருக்களாகிய திருவாலங்காடு குருக்களைக் கொண்டு.

என் தமயனார் ப. ஐயாசாமி முதலியார் சில வருடங்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தார். அவர் 1900-வது வருஷம் டிஸ்டிரிக் முன்சீப்பாக நியமிக்கப்பட்ட போது நான் அக்கோயில் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டேன். அது முதல் 1934-ஆம் வருஷம்வரையில் அவ்வேலை பார்த்துவந்தேன். இந்த 24 வருஷங்களும் என்னுடன் வேலை பார்த்து வந்த தர்மகர்த்தாக்களுடனாவது ஓவர்சியர்களுடனாவது கோயில் சிப்பந்திகளுடனாவது சச்சரவு வியாஜ்யமின்றி நடந்தேறிய தென்று சந்தோஷத்துடன் இங்கு எழுதுகிறேன்.

என் காலத்தில் நேர்ந்த சில சீர்த்திருத்தங்களைப்பற்றி எழுத விரும்புகிறேன். அதற்கு முன்பாக உற்சவப் பத்திரிகையில் கண்டபடி, மணிப்பிரகாரம் உற்சவங்கள் நடந்தேறுவதில்லை. உற்சவங்களையெல்லாம் லக்னப்படியும் பத்திரிகைகளில் கண்ட மணிப்பிரகாரம் நடத்தும்படி ஏற்பாடு செய்தேன், தர்மகர்த்தாக்கள் கோயில் பணத்தை நேராக வாங்கவும் கூடாது நேராக செலவழிக்கவும் கூடாது என்று ஏற்பாடு செய்தேன். எல்லா தேவஸ்தான வரும்படியும் முன்பு பாங்கில் கட்டப்பட்டு செலவெல்லாம் செக்குமூலமாகச் செய்யப்பட வேண்டுமென்று ஏற்படுத்தினேன். இவ்விரண்டு ஏற்பாடுகளையும் இங்கு எழுதியது. ஏதோ தற்புகழ்ச்சியாகவல்ல. இவைகளை மற்ற கோயில் தர்மகர்த்தாக்கள் பின்பற்றி நடந்தால் தேவஸ்தானங்களைப்பற்றி மற்றவர்கள் குறைகூற அதிக இடமிராதென்று தெரிவித்துக்கொள்வதற்கே எழுதுகிறேன்.

என்காலத்தில் கோயிலுக்கு கோபுரமில்லாக் குறை நிவர்த்தியாயது. அதை முடித்துவைத்த பெருமை திருவல்லிக்கேணியிலிருந்த கோபுரம் செட்டியார் என்று பெயர்பெற்ற இரண்டு சகோதர்களுக்கு உரித்தாம். (அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை.) அவர்களுக்கு என்னால் இயன்ற அளவு உதவி செய்தேன். அன்றியும் என் காலத்தில் திருமயிலை கோயில் குளமானது கருங்கல்லால் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இரண்டு சிறு படித்துறைகள் தவிர மற்ற பாகமெல்லாம் துருக்கல்லாய் இருந்தது. இதைப்பற்றிய சில வியவஹாரத்தை எழுத விரும்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/44&oldid=1110138" இலிருந்து மீள்விக்கப்பட்டது