பக்கம்:என் சுயசரிதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

தினசரி பத்திரிகை, மாதாந்திர பத்திரிகை முதலியவற்றின் சொந்தக்காரர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் சிறு எழுத்தாளர்கள் எழுதி அனுப்புவதை அச்சிட்டால் அவர்களுக்கு ஏதாவது சிறிதாவது ராயல்டி அல்லது ஆனரேரியம் கொடுக்க மறந்து போகாதீர்கள். நமது பாஷையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கோரினால் இவ்வாறு செய்வது உங்கள் கடமையாகும்.

இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள்

1938-ஆம் வருஷ முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன்.

1939-ஆம் வருஷம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருஷம் சென்னையிலிருந்து ஆயிரக் கணக்கான ஜனங்கள் வெளியூருக்குக் குடியேறின போது நானும் மைசூரில் போய் வசித்து வந்தேன். இக்காலத்தில் நாடகமேடை மறுபடியும் தலையெடுப்பது அசாத்தியம் என்று ஏங்கியிருந்தேன்.

இவ்வருஷம் நான் மைசூரிலிருந்து திரும்பி வந்த போது கொஞ்சம் தைரியம் கொண்டேன். இவ்வாண்டில் ஆகஸ்டு மாதம் மதுரையில் தமிழ் மகா நாடு கூடிய பொழுது என்னை மூன்றாவது தினமாகிய நாடகத் தமிழ் மகா நாட்டிற்கு தலைவனாக இருக்க வேண்டுமென்று அழைத்தனர். அதற்கு நான் குதூகலத்துடன் உட்பட்டு மதுரைக்குப் போனேன். அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள புது மண்டபத்தில் நாடகத்தமிழைப் பற்றி ஒருசிறு சொற்பொழிவு செய்தேன். இச்சயம் பல வருடங்களாக பாராதிருந்த என் மதுரை நண்பர்களைக் கண்டு சந்தோஷித்தேன்.

மறு வருடமாகிய 1943-ஆம் ஆண்டில் ஈரோட்டில் நாடகத் தமிழ் மகாநாடு கூடியபோது அதற்கு நாடகத்தமிழ் கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/57&oldid=1112715" இலிருந்து மீள்விக்கப்பட்டது