பக்கம்:என் சுயசரிதை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

நலத்திற்குக் கெடுதியைத்தான் தரும். ஆகவே 1928-ஆம் வருஷம் முதல் இதுவரையில் என் காலத்தை எப்படி கழிக்கிறேன் என்பதைப் பற்றி விவரமாய் எழுதுதல் இதை வாசிக்கும் எனது சில நண்பர்களுக்காவது பிரயோசனப்படும் என்றெண்ணி இதைப்பற்றி கொஞ்சம் விவரமாய் எழுதுகிறேன். காலையில் ஆறுக்கு எழுந்திருப்பேன் (நான் பரிட்சை களுக்குப் போயிருந்த காலத்தில்கூட முன்பாக எழுந்ததில்லை) விழித்தவுடன் நான் வணங்கும் தெய்வங்களை தொழுதுவிட்டு அரை மணி நேரம் உலாவுவதிலும் வியாயாமம் எடுத்துக் கொள்வதிலும் காலம் கழியும், நான் எடுத்துக்கொள்ளும் வியாயாமத்தைப்பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் எனது ‘நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்’ என்னும் நூலில் நான் இதைப்பற்றி எழுதியதை படித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அவைகளையெல்லாம் பற்றி இங்கு எழுதுதல் என்றல் இச்சிறு நூல் மிகவும் பெரிதாகி விடும். அதில் எது தவறினாலும் ஒன்று மாத்திரம் தவறமாட்டேன். அதாவது ஐந்து நிமிஷம் எடுத்துக் கொள்ளும் பிராணாயாமமாம். இது மிகவும் முக்கியம் என்று நான் வற்புறுத்துகிறேன். இது முடிந்தவுடன் என் காலைக் கடன்களை எல்லாம் தீர்த்துக் கொண்டு என் காலை பிரார்த்தனையை முடிப்பேன். இதெல்லாம் முடிவதற்கு சுமார் 2 மணி நேரமாகும். பிறகு என் காலை சிற்றுண்டியை அருந்துவேன். ஏதாவது கொஞ்சம் பட்சணமும் ஒரு பழமும் நான் அருந்தும் சுக்கு காப்பியுமாம். சுக்கு காப்பி என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றி னால் ஆனதாம், நான் காப்பி சாப்பிடுவதை விட்டு 50 வருடங்களுக்கு மேலாயது. இதன் பேரில் 9 மணி முதல் 11 மணி வரை நான் ஏதாவது எழுத வேண்டிய நாடகத்தையோ கதையையோ கட்டுரையையோ எழுதுவதில் காலங் கழிப்பேன். பிறகு என் நித்ய பூஜையை முடித்துக்கொண்டு உணவு கொள்வேன். இது எல்லாம் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணியாகும். ஒரு மன முதல் இரண்டு மணி வரையில் மெத்தையின் பேரில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முழு ஓய்வு எடுத்துக் கொள்வேன். பிறகு இரண்டு மணி முதல் 4 மணி வரையில் மறுபடியும் ஏதாவது எழுதுவதிலோ அதற்கு ஏதாவது படிக்க வேண்டியதிலோ என் காலத்தைப் போக்குவேன். நான்கு மணிக்கு மேல் ஏதாவது ஒரு சிறு பழமும் (முக்கியமாக பேரிச்சம் பழமும்) பாலும் அருந்துவேன் பிற்பாடு சுகுண விலாச சபைக்கோ, S.I.A.A-வுக்கோ, மது விலக்கு சங்கத்துக்கோ போய் அங்கு ஏழரை மணி வரையில் சீட்டாடுவதிலோ நண்பர்களுடன் பேசுவதிலோ காலங்கழிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/70&oldid=1123279" இலிருந்து மீள்விக்கப்பட்டது