பக்கம்:என் சுயசரிதை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

நாய்க்கன் பேட்டையிலிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீஸ்வரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தர்மகர்த்துவாக இருந்தார்.

அவர் ஜீவித காலத்தில் வருஷா வருஷம் காஞ்சீபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த வழக்கத்தினால் சிவாலயங்களையும் அவைகளின் சில்பங்களையும் பார்க்கவேண்டுமென்னும் ஆசை எனக்கு சிறுவயதிலேயே உண்டாயிற்று என்பதை குறிப்பதற்கேயாம் (இதைப்பற்றி பிறகு நான் எழுதவேண்டி வரும்)

என் தந்தையார் மிகவும் கண்டிப்பான மனுஷ்யர் என்று நான் கூறவேண்டும். இக்குணம் அவருக்கு வந்தது அவர் பள்ளிக்கூடத்து பரீட்சகராக (Inspector of schools) பல வருடங்கள் வேலை பார்த்ததினாலோ அல்லது அவரது தாய் தந்தையர்களின் போதனையினாலோ நான் சொல்வதற்கில்லை. இக்குணத்தை ஆங்கிலத்தில் Discipline என்று சொல்வார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதானால் எல்லா விஷயங்களிலும் கண்டிதமாயிருக்கும் சுபாவம் என்று தான் சொல்லக்கூடும். இதற்கு ஒரு உதாரணமாக அவர் தாயார் (அதாவது என் பாட்டியார்) அவரது சகோதரரையும் அவரையும் கண்டித்ததை எனக்கு அவர் கூறியிருக்கிறார். ஒரு முறை இவர்களிருவரும் சிறுவர்களாய் இருந்தபோது ‘ஏதோ’ குழந்தைகள் சண்டையில் எதிர் வீட்டு சிறுவன் ஒருவனை இவர்கள் அடித்துவிட்டார்களாம். இதைக் கேள்விப்பட்ட என் பாட்டியார் இவர்களிருவரையும் இழுத்துக்கொண்டு போய் ‘எதிர்வீட்டு அடிபட்ட பையனுடைய தாயாரிடம் விட்டு அதற்காக ‘இவர்களிருவரையும் நீங்களே தக்கபடி தண்டியுங்கள்’ என்று விட்டார்களாம்.

என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரைப்பற்றி. எனக்கு ஒன்றும் நேராக தெரியாது. அவர் நான் பிறக்குமுன் காலமாகிவிட்டார். என் பாட்டியைப்பற்றி எனக்கு நன்றாய் தெரியும். அவர்கள் 1890-ஆம் வருஷம் சுமார் 86 வயதில் காலமானார்கள். அவர்களை நாங்கள் ஒருவரும் ஆயா என்று அழைக்கலாகாது என்று எங்களுக்கு ஆக்கினை! ஆயா என்னும் சொல் பரங்கிக்காரர்களால் தங்கள் வேலைக்காரிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/9&oldid=1112810" இலிருந்து மீள்விக்கப்பட்டது