பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15. தமிழின் இனிமை

தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. “இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்படவரும் “தமிழ் தழிஇய சாயலவர்” என்ற தொடரில் வரும் “தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்கத் தேவர்.

‘ஒண் தமிழ்’, ‘தேமதுரத்தமிழோசை,’ ‘தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’ என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர்கள், தமிழின் இனிமைப் பண்பை பாராட்டிப் பரவியுள்ளனர்.

இனிய சொற்களைத்தேர்ந்து, இனிமையாக சொல்லாட விரும்பியவர் தமிழர்; தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எனவும் விரும்பினார்கள். அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடையவாகும்.

நயம்பட உரைக்கும் நாநலம் வாய்க்கப் பெற்றவர் தமிழர். மக்கள் இன்சொல் கேட்க மகிழ்வரேயல்லது வன்சொல் கேட்க மகிழார் என்ற மக்களின் மனவுணர்வின் உண்மையை உணர்ந்தவர் தமிழர். ஆகவே, அவர்கள் என்றும், எங்கும், கேட்டாரைப் பிணிக்கும் வகையில் சொல்லாடித் தம்மை விரும்பும் வகையில் கேளாரையும் வயப்படுத்தி வெற்றி கண்டு வாழ்ந்தனர். இனிய சொற்கள் இருப்பவும், இன்னாத சொற்களை வழங்குதல், இனிய