பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

109


ஒருநாள், அப்பெண்ணின் கண்களில் நீர் கசியக் கண்டு நெடிது வருந்தினாள்; அழுது துயர் உறுவது அழகன்று என அவளுக்கு ஆறுதல் உரைத்தாள். தான் படும் துயர்க்குத் தோழியும் துயர் உறுவதை, அப்பெண்ணின் அன்புள்ளம் தாங்கிக் கொள்ள மாட்டாது தளர்ந்தது; அவள் பொருட்டாவது தான் தன் துயரை மறைத்துக் கொள்ளுதல் வேண்டும் என எண்ணிற்று அவள் தூய உள்ளம்; உடனே, "தோழி! என் துயர்க்கு, நீ நினைப்பதுபோல் நம் காதலர்ப் பிரிவு காரணமன்று; அது குறித்து நான் சிறிதும் கவலையுற்றலேன், என் கண்ணீர்க்குக் காரணம் வேறொன்று உளது; தோழி! நம் மனையைச் சுற்றி வேலிபோல் வளர்ந்திருக்கும் பனைமரத்தின் மடல்களுக்கிடையே கூடுகட்டி வாழும் அன்றில்களில் ஒன்று ஓயாது ஒலிக்கிற்கே, அது உன் காதுகளுள் சென்று ஒலிக்கவில்லையோ? இணைபிரியாது வாழும் இயல்பினவாய அவற்றுள் ஒன்று எங்கோ சென்றுவிட்டது போலும்.

பிரிந்துபோன தன் துணை, மாலை கழிய இரவு வந்துற்ற பின்னரும் வாராமையால் வருந்தி, கூவிக் கூவி அழைக்கும் அதன் குரல், அதன் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பெருகும் துன்பத்தை வெளிப்படுத்துவது காண்.

அப்பறவை படும் துன்பம் என் உள்ளத்தையும் ஆறாத துயரில் ஆழ்த்தி விட்டது; அத்துன்பச் சுமையை தாங்க மாட்டாதே என் கண்கள் நீர் கசியத் தொடங்கிவிட்டன இதுவல்லது, நான் காதலர் குறித்துக் கலங்கவில்லை. ஆகவே அவர் போய்விட்டார் என்றோ, அதுவே என்னைத் துயர் கடலில் ஆழ்த்தி விட்டது என்றோ எண்ணி நீ துயர் வரவேண்டாம் எனக் கூறிக் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.

அப்பெண் கண்ணீர் சொரியக் கலங்கி நிற்கும் நிலை கண்டே வருந்திய தோழி அவள் கூறியன கேட்டு மேலும்