பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

என் தமிழ்ப்பணி

வருந்தினாள். கணவன் மேற்கொண்டிருக்கும் பரத்தையர் தொடர்பே தன் துயர்க்குக் காரணமாகவும் அது காரணமாகத்தான் அழுவதைப் பிறர் அறிந்து கொண்டால் அது தனக்கும் தன் கணவனுக்கும் புகழ்க்கேடாம் எனக் கருதும் உயர்வுள்ளம் உடைமையால், அதை மறுத்து விட்டு, பிறிதொரு காரணத்தைக் கற்பித்துரைக்கும் இவள் பெருந்தன்மையை என்னென்பேன்; அன்றிற் பறவையின் ஆறாத் துயர் கண்டு இவள் உள்ளம் கலங்கும்; இவள் உள்ளம் அத்துணை அருள் நிரம்பியதே என்பதை நான் அறிவேன்; அவ்வருள் உள்ளம் உடைமையால் அன்றோ, அன்று அவனை ஏற்றுக் கொண்டாள்; தன் பொருட்டு இவன் இத்துணைப் பாடுபடுகின்றனனே என்ற இரக்கவுணர்வு அன்றோ அவளை ஆட்கொள்ளப் பண்ணிற்று.

ஆனால் இன்று இவள் கண்ணீர்க்கு அன்றி பறவைகள் பால் கொண்ட அருள் காரணமாகிவிடாது; கணவன் பிரிவுத் துயரால், அதிலும் அவன் பரத்தையர் தொடர்புற்றுப் பழிமிகு வாழ்வு மேற்கொண்டு விட்டான் என அறிந்தமையால் உற்ற பெருந்துயரால் நிறைந்திருக்கும் இந்நிலையில், அவ்வுள்ளத்தில் அருளுணர்வு அரும்பியிருக்காது; ஆனால், அன்றிலின் துயர்நிலை கண்டே தன் கண்கள் அழுகின்றன என இவள் கூறுவது, காதலன் பிரிவால் துயர் உறுகிறேன் எனக் கூறல் பெருமைத் கேடாம்: புதழ்க்கேடாம் என அறிந்தமையால், அதை எனக்குக் காட்டாது அடக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்ற பெருமிதவுணர்வு கொண்டமையாலேயாம்; துயர் கொண்டு துடிக்கும் இவள் அதைப் பிறர் அறியவாறு அடக்கி வாழ இன்னும் எத்துணை துயர்க்கு உள்ளாக வேண்டுமோ? அந்தோ! இவள் நிலை நனிமிக இரங்கற்குரித்து என எண்ணித் துயர் உற்றாள்.