பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

123

காலம் தொட்டுக் காவிரிப்பூம்பட்டினம் எனும் பெயர் பெற்றது. பரசுராமன் சினத்திற்கு ஆளாகாமல் தப்பிப் பிழைத்த, ஒரே அரசனாகிய ககந்தன் என்பவன் ஒரு காலத்தில், புகார் நகரில் இருந்து அரசாண்டானாதலின், அந் நகர்க்குக் காகந்தி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

மேலைநாட்டு வணிக மக்களும், உலகை வலம் வந்த பெரியார்களும், காவிரிப்பூம்பட்டினத்தைக், கி.பி. முதல் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தனர். கி.பி. 81-96ல் எழுதப்பெற்ற “பெரிபுளூஸ் மாரிஸ் எரித்ரியா” நூலில் கொற்கைத் துறைக்கு வடக்கில், ‘கடற்கரை நாடு’ என்ற கடலைச்சார்ந்த நாடு ஒன்றும், ‘அர்கரு’ என்ற உள்நாடு ஒன்றும் இருந்தனவாகக் கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும், முறையே, கடற்கரை ஊராகிய புகாரையும், உள்நாட்டு ஊராகிய உறையூரையும் தலைநகர்களாகக் கொண்டு விளங்கிய இரு சோழ அரசுகளையே குறிப்பனவாம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தாலமி என்ற நில நூல் பேராசிரியர், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் “கபெரீஸ்” எனும் ஓர் ஊர் உளது எனக் கூறியுள்ளார்; அவர் கூறிய ஊர் புகாரே என்பதில் சிறிதும் ஐயமில்லை. கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட, “மிலிந்தா அரசனுடைய கேள்விகள்” என்ற பெளத்த நூல், “கடற்கரை நகரங்களுள் சிறந்தது கோளப்பட்டினம்” என்று கூறுகிறது. அது கூறும் கோளப்பட்டினம், சோழர் கடற்கரை நகராகிய புகார் நகரேயாம் எனக் கூறவும் வேண்டுமோ?

புகார், பழமையும் பெருமையும் மிக்க ஒரு மாநகர்: அது, இமயத்தோடும், பொதியத்தோடும் தோன்றிய பழமை வாய்ந்தது; தன்னை என்றும் பிரியாது, தன்னகத்தே வழி வழி வாழ்ந்த பழம்பெரும் குடிகளைக்கொண்டது; வேந்தனும்