பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

என் தமிழ்ப்பணி


யவனர் வாழிடத்தை விடுத்து, அகநகர் நோக்கிச் சென்று கொண்டேயிருந்தால் பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் ஆடைகள் நெய்து அளிக்கும் நெசவாளரும் நெல் முதலாம் உணவுப் பொருள்களைக் குவியல் குவியல்களாகக் கொட்டிவிற்கும் கூல வணிகரும், பிட்டு, அப்பம், மது, மீன், வெள்ளுப்பு: வெற்றிலை, இறைச்சி ஆகிய பொருள்களில் வாணிகம் புரிவோரும், கருங்கைக் கொல்லர், வெண்கலக் கன்னார், செம்பு செய்குநர், பொன்செய் கொல்லர், மட்கலம் வனைவார், மரத்தொழில் புரிவார், ஓவியக்காரர், தையல் தொழிலாளர் முதலாய பல்வகைத் தொழிலாளரும், பாணர், குழலர் முதலாம் இசையாளரும், குற்றேவல் புரிவோரும் வாழும் வீதிகளை வரிசையாகக் காணலாம்.8

மேலே கூறிய வீதிகள், இருபக்கத்திலும் வரிசை வரிசையாகப் பிரிந்து கிடக்க, இடையே நீண்ட பெருவீதியொன்று, அகநகரையும், ஆயத்துறையையும் இணைத்துச் செல்லும். நாவாய்கள் கொண்டு வந்து தந்தனவற்றை, நகரின் நடுவே அமைந்திருக்கும் நாளங்காடிக்குக் கொண்டு வரவும், நாவாய்க்கு ஏற்றவேண்டுவனவற்றை, அந்நாளங்காடியிலிருந்து கொண்டு செல்லவும் அப்பெரிய வீதி பயன்பட்டது.9

போக்குவரவு மிக்க அவ்வீதியில், மக்கள்.மண்டிக் கிடப்பர் ஆதலின், அவ்வீதியில், வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடி, நறுமணச் சந்தனம், மலர், மணம் நாறும் புகைதரு பொருள்கள் போலும், நாகரீக நம்பியரும், நங்கையரும் விரும்பி வாங்கும் பொருள்களை விற்கும் சிறு வணிகர் கூட்டம் திரிந்து திரிந்து வாணிகம் புரியும்.10

மருவூர்ப்பாக்கத்தை விட்டால் வருவது நாளங்காடி; எதிர் எதிராக நிற்கும் இரு படைவீரர்களும் ஒன்று கலந்து போரிடும் இடை நிலம் போல, மருவூர்ப் பாக்கத்து மக்களும்