பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

129

முதலாம் ‘கொடிய நோயாளர்களின் நோய் போக்கி’ நல்லுடல் அளிக்கும் மருத்துவ மாண்பு மிக்க பொய்கையை உள்ளடக்கி நின்ற உயர்ந்த மன்றம் ஒன்றும் ஆங்கிருந்தது.16

பகைவரால் வஞ்சிக்கப்பட்டு மயக்க மருந்து ஊட்டப் பெற்றவரும், நஞ்சுண்டு உயிர்போகும் நிவையுற்றோரும் பாம்பின் வாய்ப்பட்டோரும், பேயால் பற்றப்பட்டோரும், வந்து தன்னை வலம்வர, அவர்மீது தன் நிழல்பட்ட அப்போதே அவர் துயர்போக்கி வாழ்வளிக்கவல்ல ஒளியை வீசும் ஒருவகைக்கல் நாட்டப் பெற்ற மன்றம் அந்நகருக்கு மாண்பளித்திருந்தது.17

தவநெறியுடையோர்போல் வெளிவேடம் தாங்கிப் பிறர் காணாவாறு பழிபாவம் புரியும் ஒமுக்கநெறி இகந்தோர், கணவன் அறியாவாறு கற்பிழக்கும் காரிகையர், அரசரோடு உடன் வாழ்ந்தே, அவர்க்கு அவர் அறியாவாறு அழிவுதேடும் அமைச்சர், மணந்த மனைவியை மறந்து, பிறர் மனைவியரின் பின் திரிவோர், மன்றில் பொய்ச்சான்று கூறுவார், ஒருவரைக் கண்டவிடத்துப் புகழ்ந்து, காணா விடத்துப் பழிக்கும் புறங்கூறுவார் போன்ற கொடியோர்களை கைப்பாசத்தால் கட்டி ஈர்த்துக்கொன்று உயிர் போக்குவேன் என, நகரில் நான்கு எல்லையும் கேட்டுமாறு உரத்துக்கூறி, கூறியதோடு நில்லாது அத்தகையாரைப் பற்றி ஒறுத்து அறம் காக்கும் காவல் பூதம் நிற்கும் மன்றம் புகார் நகருக்குப் பெருமையளித்திருந்தது.18

ஆளும் முறையை அரசர் மறந்தால், அறநூல் கூறும் நெறிமுறை விடுத்து, ஒருதலை தீர்ப்பளிக்க, அறம் வழங்கும் ஆன்றோர்கள் துணிந்தால், நாட்டில் நிகழும் அக்கேடுகளை நாவால் எடுத்துக்கூறாது, கண்ணிர் வடித்துக் கலங்கிக் காட்டும் பாவையைக் கொண்ட பாவை மன்றம், புகார் நகரின் வாழ்விற்கு அருந்துணை அளித்தது.19