பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

என் தமிழ்ப்பணி



இவை அத்தனைக்கும் மேலாக கள்ளம் அற்ற அவள் உள்ளத்தில் காதல் உணர்வு ஒன்றே இடம் பெற்றிருந்தமையால், அவள் உருவ நலன் மேலும் பன்மடங்கு உயர்ந்து காட்டிற்று.

மனைவியின் இம்மா, நலத்தைக் காண நேர்ந்ததும் அவன் உள்ளுணர்வு சிறிதே நிலை தளர்ந்தது. இத்துணைப் பேரழகுடையாளைப் பிரிந்து பொருளிட்டப் போவது கூடாது. இவளை இங்கே விட்டுச் சென்றால் அங்கே வெற்றி பெறுதல் இயலாது.

இவள் பேரழகு தன் முயற்சியைப் பாழாக்கிவிடும். ஆகவே பொருளீட்டும் நினைப்பு இப்போது வேண்டாம் எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறிற்று. உள்ளுணர்வு உரைப்பது உண்மை என்பதை அவன் நெஞ்சம் உணர்ந்திருந்தது. என்றாலும், பொருளின் இன்றியமையாமை எவ்வாறாயினும் சென்று பொருளீட்டி வா எனக் கூறினமையால் அந்நெஞ்சு, அப்பொருளீட்டும் முயற்சியில் நீங்காது நின்றது. அவன் புறப்பட்டு விட்டான்.

இளைஞன் பல காவதங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தான், காட்டு வழிக் கொடுமையால், அவன் உடல் நலன் சிறிதே தளர்ந்தது. உடல் தளர்ச்சி அவன் உணர்வையும் பற்றிக் கொண்டது. உணர்வு உரம் இழந்ததும், காதல் வேட்கை உரம் பெற்று எழுந்தது.நெஞ்சு அதற்கு அடிமையாகி விட்டது. அதனால் அது அவனை மேற்கொண்டு செல்லாவாறு தடை செய்தது. மீண்டும் மனை நோக்கி செல்லுமாறு வற்புறுத்திற்று. இந்நிலையில், அவன் வினை மேற்கொண்டு வழியை முன்னோக்கிக் கடப்பதோ, காதலியை நினைந்து கடந்து வந்த காட்டு வழியே மீள்வதோ செய்ய மாட்டாது செயலிழந்து நின்று விட்டான். காதலுக்கு அடிமைப்பட்டு கடமை முயற்சிக்குக்கேடு சூழும் நெஞ்சின் பால் அவன் உள்ளுணர்வு சினம் கொண்டது.