பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. திருக்கோவையார் உரைநயம்

மணிவாசகர் பாடிய இருவாசகங்கள் திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும். செவிக்கும் சிந்தைக்கும் இனிக்கும் சொல் நயமும் பொருள் நயமும் வாய்ந்த திருவாசகத்தைத் “தித்திக்கும் திருவாசகத்தேன்” எனப் போற்றும் புலவர்கள், திருக்கோவையார் எண்ணுவார்-எண்ண விழைவுகளுக்கேற்ப. ஆரணமாகவும், “ஆகமத்தின் காரணமாகவும் அமைந்து ஆயுந்தொறும் ஆராம்பேரின்ப வாரிதியாகும் எனப் போற்றுவர்.

கோவையார் பெற்றிருக்கும் இவ்வின்பக்குவியல்களைப் படிப்பார் உள்ளத்தில் கொண்டு சென்று கொட்டுவது, அக்கோவைக்குப் பேராசிரியர் வகுத்திருக்கும் உரையாகும். அவர் உரை மட்டும் இல்லாமல் போயிருந்தால் கோவையின் கருத்துச் செறிவுகளைக் கண்டுகளிப் பெய்த வாய்ப்பே இருந்திருக்காது. தோலும் தொலுப்பும் அகற்றிச் சுளை சுளையாக எடுத்துத் தேனில் தோய்த்து அளித்த வழியே பலாக்கனியின் சுவையினை உணர முடியும்.

அதுபோல் சொல்லையும் சொற்றொடரையும் தனித்தனியே பிரித்து இலக்கண விளக்கம் பொருள் விளக்கங்களைக் கடா விடைகள் மூலம் விலக்கிய பின்னரே கோவையின் சுவையினை உணர வைத்துள்ளார் உரையாசிரியர்.