பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

57



அப்பெண்ணின் நினைவு ஆங்கு இல்லை. விழா முடிவில் தன் நோய்தணியா தாயின் தன் நிலை என்னாவது என் எண்ணித்துயர் உற்றுக் கிடந்தாள். அப்போது, ஆங்கு, அவள் அறிந்த அம்மணம் வீசிற்று. தலை நிமிர்ந்து சுற்றிச் சுற்றிப் பார்த்தாள்.

களிற்று யானை இறைச்சிபால் காதல் கொண்டபுலி, அக்களிறு தப்பிப் போகாவாறு, அதை எப்படியாவது கொன்று வீழ்த்த வேண்டும் என்ற கருத்தால், அது கண்டு அஞ்சி கண்டு ஓடி விடாவாறு, ஆங்காங்குள்ள புதர்கள் தோறும் ஒளிந்து ஒளிந்து, அதே நேரத்தில், களிற்றின் மீது சென்ற தன் கண்பார்வை தப்பாது பின் தொடர்ந்து செல்வது போல், தன் காதலன், தன் வீட்டுக் காவலர் அறிந்து கொள்ளாவாறு ஒளிந்து ஒளிந்து வருவதைக் கண்டாள்.

உடனே, அங்குள்ளார் அறிந்து கொள்ளவாறு, அவ்விடத்தை விட்டு நீங்கி காதலனை அடைந்து சிறிது நேரம் இருந்து இன்புற்றாள். மீண்டும் பிறர் அறியாவாறு விழாக் களத்தை அடைந்து விட்டாள்.

காதலனைக் கண்டு களிப்புற்றமையால் அவள் மேனியைப் பற்றி வருத்திய நோய் மறைந்திருந்தது. விழா முடிந்தது; தாய் தன் மகளை நோக்கினாள். அவள் மேனி நோய் நீங்கித் திகழ்வதைக் கண்டாள், வெறியாட்டின் பயன் அது என உணர்ந்து மகிழ்ந்தாள்.

அன்று தனக்கு நேர இருந்த கேடு, ஒருவகையால், நீங்கினமை கண்டு அப்பெண்ணும் மகிழ்ந்தாள். காதலன் வரவால் நோய் நீங்கவும், தாய் அதை வெறியாட்டின் விளைவு எனக் கருதுவது கண்டு, அவள் அறியாமையை எண்ணி அவள் உள்ளம் நகைக்கவும் செய்தது. ஆனால் அம் மகிழ்ச்சியும் நெடிது நிற்கவில்லை.

என்-4