பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

69

தால் எழுந்த மணம் கம்மென வீசத் தொடங்கிவிட்டது. அது போதாதோ, கார்காலம் தொடங்கி விட்டது என்பதைக் காட்ட. தோழி! மலர்வதற்கு முன் சிவல் பறவையின் முள் போல் கூர்மையுற்றுக் காண்பதற்குக் கொடியவாய்க் காட்சி அளித்த முல்லை அரும்புகள், மலர்ந்த பின்னர் எத்துணை இனிமையாக மணக்கிறது கண்டாயா?

நம்பால் மனம் நெகிழ்ந்து, காலம் தாழ்க்காது வந்திருந்தால் நம் மனம் விரும்பு இனியவராக விளங்க வேண்டிய நம் கணவர் மனவிரக்கமற்று வராதிருப்பதால் நனிமிகக் கொடியவர் போல் தோன்றுகின்றனரே.

என்னே கொடுமை! தோழி! முல்லை தனித்து மலர்ந்திருந்தால் மணம் காடு நிறையப் பரவியிராது பிடவும் உடன் மலர்ந்ததினாலேயே இவ்வளவு மணம் எழுந்துளது: பொருளீட்டும் தன் பணியில் வெற்றி காண்பதால் அவர் மனம் மட்டும் நிறைந்து விடுவதால் வாழ்க்கையில் உண்மை இன்பம் உண்டாகிவிடாது. வாக்களித்துச் சென்றவாறே கணவர் வந்து சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு என் மனமும் நிறைவு பெறுதல் வேண்டும். எங்கள் இருவர் நெஞ்சும் நிறைந்த வழியே எங்கள் வாழ்க்கையில் உண்மைப் பேரின்ம் நிலவும். இதை அவர் உணர்ந்திலர்: இப்போதும் அவர் வந்திலர். இதற்கு யான் என் செய்வேன்?

“தோழி! கார்காலம் தொடங்கியது மட்டுமன்று இப்போது கார்கழி காலமும் ஆகிவிட்டது. பள்ளங்களில் வெண் சங்குகள் உடைந்து கிடப்பனபோல் மலர்ந்துள்ள வெண்காந்தட் செடிகளுக்கு இடையிடையே தலைகாட்டும் அறுகம்புல்லை அதோ பார். கார்காலம் தொடக்கத்தில் முளைக்கத் தொடங்கிய அவ்வறுகு, இப்போது கிழங்கு விடுமளவு வளர்ந்துவிட்டது. அது கார்காலக் கழிவை யில்லவோ உணர்த்தும்.