பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

என் தமிழ்ப்பணி


இன்னமும் அவர் வந்திலர். காதற்பிணையை அடையப் பெற்றேம் என்று களிப்பு மிகுதியால் செருக்கித் திரியும் அக் கலைமான் வெண்காந்தளும் அறுகங்கிழங்குமாகிய அரிய உணவையும் வெறுத்து, தன் காதற்பிணையின் பின் திரியும் அப்பேரின்பக் காட்சியை, தோழி! நீயும் காண். இக்காதற் காட்சியைக் கண்டும் என் கண்கள் கலங்காதிருக்குமோ? இக் கலைக்கு உள்ள உணர்வுதானும் நம் காதலர்க்கு இல்லையே: பயிரையும் பாவையும் வெறுத்துவிட்டு இரலை, பிணையின் திரிகிறது ஈண்டு.

ஆனால், நம் காதலர், பொருள்மீது சென்ற வேட்கையை வெறுத்து, நம்மோடு கூடிக் களிக்கக் கருதாது. நம்மை மறந்து, பொருளை விரும்பி ஆண்டே கிடக்கிறார்: இதற்கு என் செய்வேன்?

“தோழி மழை பெய்தது. அதைக் கண்ணுற்ற நான் மழைதான் பெய்தது. ஆனால் முல்லை இன்னமும் அரும்பீன் வில்லை. அது அரும்பீனும் கர்வத்தில் அவர் வந்துவிடுவார்; அவர் அளித்த வாக்கு பொய்யாகாது என நம்பி அமைதி கண்டேன். அது கழிந்தது. முல்லையும் மலர்ந்து விட்டது. அப்போதும் அவர் வந்திலர். அவர் வாக்குப் பொய்த்து விடுமோ? அதனால் அறம் பிறழ்ந்த தவறு அவரைச் சார்ந்து விடுமோ என்ற ஐயம் எழுத்தது. அதனால் வருந்தினேன்.

அக்காலமும் கடந்துவிட்டது. கார்கழிகாலம் வந்து விட்டதை அறுகங்கிழங்கு உணர்த்தக் கண்டேன். இந்நிலையிலும் அவர் வந்திலர். அவர் உரைத்துச் சென்ற வாக்கு உறுதியாகப் பொய்த்துவிட்டது. அதனால் அவர்க்கு என்ன கேடு நேருமோ என எண்ணி நடுங்குகிறது என் உள்ளம் தோழி! பொருள், அறத்திற்கும் இன்பத்திற்கும் துணையாய். விளங்கவேண்டும்.