பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

என் தமிழ்ப்பணி

யோட்டும் அவள் தொழில் அறிவையும், அவள் குரல் இனிமையையும் கண்ணெதிர் கண்ட இளைஞன். அவள்பால் காதல் கொண்டான். நாற்புறமும் திரும்பித் திரும்பிக் கிளியோட்டிக் கொண்டிருந்த அவள், இளைஞன் நின்றிருந்த பக்கத்தில் படிந்திருக்கும் கிளிகளை ஓட்ட அப்பக்கம் திரும்பினபோது, ஆங்கு அவன் நிற்பதைக் கண்டாள். இளமை நலம் விளங்கும் அவன் திருமேனி, அவன் மார்பில் கிடந்து மணம் நாறும் மாலை, கையில் ஏந்திய வில்லும் அம்பும் அவன் காலடியில் நிற்கும் நாயின் குறுகுறுத்த நோக்கும் உணர்த்தும் அவன் வீரம் ஆகிய அனைத்தும், அவ்வாறே அவள் உள்ளத்தில் குடி புகுந்து கொண்டன.

அவளும் அவன் நிலையினளாயினாள். இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு விட்டனர்; அன்று முதல், இளைஞன் வேட்டைத் தொழிலை மறந்து ஆங்கு வருவதும், இவள் காத்தல் தொழிலைக் கைவிட்டு அவன் வருகையை எதிர்நோக்கிக்கிடப்பதும்அவன் வந்ததும் இருவரும் கூடி மலையருவியில் ஆடியும் மலர் பறித்துச் சூடியும் மகிழ்வதும் வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் நாட்கள் மெல்லச் சென்று கொண்டிருந்தன. இடையறா இன்பவெள்ளத்தில் மூழ்கியிருப்பவர் இடையிடையே ஓரிரு நாட்கள் துன்புறவும் நேர்ந்தது. இளைஞனுக்குரிய ஊர் பலமலைகளுக்கு அப்பால் இருந்தமையால் அவன் எவ்வளவு முயன்றும், எதிர்பாரா இடையூறுகளால் ஒருசில நாட்களில் வர இயலாது நின்றுவிடுவான். அந்நாட்களில் அவள் உள்ளம் ஆற்றொணாத்துயர் உறும்; கடமையிலும் கருத்துச் செல்லாது. இவ்வாறு அவன் வாராது போவது அடிக்கடி ஏற்படவே, அவள் உள்ளத்தில் புதுக்கவலை ஒன்றும் புகுந்து கொண்டது. அவனோ