பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

95

கான்ற் சோலைக்கு அணித்தாக ஓடிய கழியைப் பார்த்தாள்; ஆங்கு, மலர்ந்து மணம் வீசிய மலர்கள், மாலை வரவால், வாய் குவிந்து வாடுவதைக் கண்டாள்.

அது காதலன் வாராமையால் தன் உள்ளம் உவகை இழந்து, உணர்விழந்து சோர்ந்து போவதை நினைவூட்ட நின்று வருந்தினாள். கடலை நோக்கினாள். அது 'ஓ' எனப் பேரிரைச்சல் எழுப்பி, அலை வீசி ஆர்ப்பரிப்பதைக் கண்ணுற்றாள். காதலன் வாராமையால் துயர் உற்றுக் துன்ப அலைகள் தொடர்ந்து வீசும் தன் உள்ளத்தையே அக்கடலில் கண்டாள்; அவள் கண்கள் குளமாயின; கடல் நீரிலும், கழி நீரிலும் மீன் கவர்ந்துண்டு உயிர் வாழும் பறவை கூட்டம், வாழிடம் மீள்வதற்குரிய மாலைக் காலம் வந்ததும், தம் தொழிலைக் கைவிட்டுக் கரைக்கண் வளர்ந்திருக்கும். புன்னை மரங்களில் உள்ள தம் கூடுகளை அடைந்து அடங்குவதைக் கண்டாள்.

இப்பறவைகளுக்கு உள்ள உணர்வுதானும் நம் கணவர்க்கு இல்லையே; கடமை முடிந்ததும் விரைந்து வீடடடைய வேண்டும் என்ற உணர்வு அவர்க்கு உண்டாகவில்லையே என எண்ணினாள். உள்ளம் நொந்தாள், உள்ளம் நொந்திருப்பாளை ஆங்கு ஒலித்த வண்டோசை கவர்ந்தது.

வண்டுகள் சில கரைக்கண் காணப்படும். மரஞ்செடிகளின் மலர்களுக்கும், கழிப் பூக்களுக்குமாக மாறி மாறித் திரிவதைக் கண்டாள். உயிர்கள் எல்லாம் ஒருங்கே அடங்கும் அந்திக் காலத்தில் அவ்வண்டுகள் மட்டும் அலைந்து திரியும் அக்காட்சி, பொருள் தேடிப் போனவர் எல்லாம் மீண்டு வந்து மனை புகவும், தன் காதலன் மட்டும் மீளாது பொருள் மேல் சென்ற வேட்கையால் போன நாட்டில் அலைந்து திரியும் காட்சியை அவள் அகக்கண் முன் கொணர்ந்து காட்டக் கலங்கிக் கண்ணிர் சொரிந்தாள்.