பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

என் தமிழ்ப்பணி



அப்பெண்ணின் அகத்தெழு துயரைத் தோழி அறிந்து கொண்டாள். இவளை இவ்வாறு வருந்த விடுத்துச் சென்று இன்னமும் வந்திலனே. அவன் அன்பு இருந்தவாறு என்னே! என் எண்ணி வருந்தினாள். வருந்தியதோடு நில்லாது. இவளை இவ்வாறு துயர்க்கடலில் ஆழ்த்தி வருத்துவதினும், அவனோடு கொண்ட நட்புத் தொடர்பு அறுந்து போகினும் நன்றாம் என நாக் கூசாது கூறியும் விட்டாள்.

தோழி கூறிய கடுசொல், அப்பெண்ணின் செவியில் சென்று தாக்கிற்று; அவள் நிலை கலங்கிப் போனாள்; நட்பின் திறம் அறிந்தவள் அப்பெண்; தனக்கு உணவளித்து உயிர் ஓம்பிய நீர்நிலை நீர் வற்றிப் போனதும் அந்நீர் நில்லயை மறந்தோடும் மாண்பிலா உயிர் போன்றதன்று அவள் உயிர் நிலை; அந்நீர் நிலை நீர் அற்றுத் தன் உயிர் போக்கும் நிலை உற்றபோதும், அந்நீர் நிலையை விட்டு நீங்காது வாழும் ஆம்பற் கொடி போன்றது அவள் உயிர்.

கணவன்பால் அத்தகைய உயரிய நட்பே கொண்டிருந்தாளாதலின், தோழி கூறியது கேட்டு நெஞ்சு நடுங்கினாள்: வரும்போது வழியில் கண்ட வயற் காட்சியே, தோழியை அம்முடிவிற்குக் கொண்டு விட்டது போலும்: நெல்லரிவார் வருகை கண்டு அஞ்சியும், களம்பாடுவார் முழக்கிய தண்ணுமை ஒலி கேட்டு வெருவியும், தனக்கு வாழ்நாள் முழுதும் உணவளித்து உயிர் ஓம்பும் வயலை விடுத்து ஓடிய நாரை போல், பொருள் மேற்சென்ற வேட்கை மிகுதியால் கணவன் தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து போனமையாலும், அவன் போயிருக்கும் பொழுது,மாலையும் மனத்தை மருட்டும் நிகழ்ச்சிகளும் மேலும் துயர் செய்வதாலும், தான் அவன் அன்பைத் துறந்துவிட வேண்டும் எனத் துணிந்து விட்டாள் போலும். அது உயர்ந்த நட்புடையார்க்கு ஒழுக்கம் ஆகாதே; தோழி இதை அறியாதவள் அல்லள், அறிவே உருவாய் அமைந்த அவளை அந்த முடிவிற்குக்