பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

97

கொண்டு விட்டது தன் கவலையும் கண்ணிருமேயாம் என உணர்ந்தாள்.

உடனே தோழியை நோக்கி, “தோழி! மரவினம், மாவினம் முதலாம் அனைத்துயிர்களும், மாலை வந்துற்றதும் செயலற்று அடங்கியுள்ளன. ஆனால் அவற்றை அந்நிலையில் இருக்க விட்டிலது இவ்வாடை; இதோ பார்; இதுகாரும் அசைவற்று அடங்கியிருந்த இத் தாழையை இப்போது வீசும் வாண்டக்காற்று, பேயாட்டம் ஆட்டிஅலைக் - கழிப்பதைக் காண்; தாழையைத் தளர வைக்கும் அதே வாடைதான், துயர் அடங்கியிருந்த என் நெஞ்சையும் துன்பத்திற்குள்ளாக்குகிறது. வாடையால் வருந்தியே என் நெஞ்சம் செயலிழந்து துயர் உறுகிறது. நம்மைத் தனியே விடுத்துப் பிரிந்து போய் நம்மை வருத்தும் அவர், விரைவில் மீண்டு வரும் அருள் உள்ளம் அற்று ஆங்கே வாழ்வதால் நம்மை மேலும் வருத்துகிறார் என்பது உண்மையே என்றாலும், இப்போது நம்மைப் பெரிதும் வருத்துவது இவ்வாடையே ஆகும்.

ஆகவே அவர் நட்பு அழிந்து போக ஆசைப்படுவது அறிவுடைமையாகாது? அவர் துன்பமே தரினும், அவரொடு கொண்ட நட்பு அழிவுறாது என்றென்றும் நிலைபெற்று வாழ்வதையே விரும்புகிறேன். நான்; அவரை அடைந்து அவர் மார்பிற் கிடந்து இன்புறும் இனிய வாழ்க்கையை விரும்பி அவர்பால் சென்று, அவரையே சுற்றிச் சுற்றித் திரியும் நம் நெஞ்சு அவர் நட்பை இழந்து நம்பால் வராதிருப்பதையே விரும்புகிறேன், நான். தோழி! அவரை மணந்து - அவரால் மாண்புற்ற நாம் இப்போது அவர் கடமையுணர்வால் காதல் உணர்வு அற்றுக் கிடக்கிறார் என்பதால் அவரோடு கொண்ட நட்புறவை அறுத்துக் கொள்வதோ, அவரை அறவே மறந்து விடுவதோ அழகல்லவே; அது வழியில் கண்ட நாரை போலும், நன்னெறி அறியா நயமிலிகள் செய்யும் செயல் அல்லவோ? ஆகவே, தோழி!