பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

101



ஸ்ரீபெரும்பதூருக்கு நான் கூடப் போயிருப்பேன். ஒரு வேளை கொல்லப்பட்டும் இருக்கலாம். முன்பு, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை வடமராய்ச்சி வரை துரத்தி, நிர்மூலம் செய்யப் போன போது போர்ப் பிரகடனம் செய்வது போல், இலங்கையின் ஆகாய எல்லையை மீறி, பின்னர் இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி. இவரது அன்னைதான், இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கிப் புலிகளைப் போராளியாக்கியவர். பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை கேட்ட போது, அதைப் புறக்கணித்தவர் ராஜீவ் காந்தி. ராஜீவின் அணுகு முறை தவறாகப் போய் விட்டாலும், விடுதலைப் புலிகளை வைத்தே, வட இலங்கையில் தமிழ் போலீஸை அமைக்கவும், இந்த வீரர்களின் மறு வாழ்விற்காகக் கணிசமான நிதி ஒதுக்கவும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வகை செய்தவர்.

பாலஸ்தீனிய மக்களுக்கு உரிமைக் குரல் எழுப்பும் யாசர் அராபத்தைப் பின்பற்றி, பிரபாகரனும், சகோதரக் கொலைகளில் ஈடுபடாமல் நீக்குப் போக்காக நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். ராஜீவ் காந்தி கொலை மூலம், இவர்கள் தமிழகத்தில் ஜெயலலிதாவின் தலைமையில் ஒரு அந்நியக் கலாச்சாரத்திற்கு அடி கோலியவர்கள். இலங்கை புலி மாகாண சபையைக் கைப்பற்றி, அதைத் தங்கள் பக்கம் வளைத்துக் கொள்ளும் பக்குவமற்றவர்கள். பிரபாகரன் அவர்களின் பிள்ளைகள் இருவர், தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். அதே சமயம், இலங்கைத் தமிழ்ப் பொடியன்கள், கட்டாயமாக விடுதலைப் படையில் சேர்க்கப் படுகிறார்கள். பிரபாகரன் பிள்ளைகள் படிப்பதில் மகிழ்ச்சியே. இந்த அடிப்படை உரிமையை இவர் ஏன் இலங்கைப் பொடியன்களுக்குக் கொடுக்கவில்லை என்பதுதான் கேள்வி. என்றாலும், இலங்கைத் தமிழர்கள் சாகட்டும் என்று சிலர் இவர்களைக் குறை சொல்கிறார்கள். நானோ இலங்கைக் தமிழன் சாகிறானே என்று இவர்களை ஆட்சேபிக்கிறேன்.

இந்தக் கொலை நிகழ்ச்சி தெரிந்ததும், கலைஞர் ஆடிப் போய் விட்டதாக அறிகிறேன். மத்திய அரசின் பதவி நீக்கத்தால், மக்களிடையே அனுதாபம் பெற்ற திமுக, இந்தக் கொலையால், தேர்தலில் ஒன்றும் இல்லாமல் போகும் என்பது கலைஞருக்கும் தெரிந்து விட்டது. ஆகையால், கையறு நிலையில், இரண்டு கைகளையும் உதறி ‘எல்லாம் போயிட்டே, எல்லாம் போயிட்டே’ என்று அரற்றியதாக அறிகிறேன்.