பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

என் பார்வையில் கலைஞர்



சென்னை பொது மருத்துவ மனையில், ராஜீவ் காந்தியின் சடல கோரத்தைப் பார்த்து விட்டு, சென்னை வானொலியில் செய்தியாக்கிய போது, கலைஞர் ஒரு திரைப்படத்தில் ‘பிஞ்சு மாங்காயைப் பிளந்தது போல்’ என்று குறிப்பிட்ட உரையாடல் வாசகத்தையே செய்தியிலும் குறிப்பிட்டேன்.

அதிமுக தொண்டர்கள் எனப் படுவோர் ராஜீவ் காந்தி கொலைக்கு அடுத்த படியாக, மூன்று நாட்கள் திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களின் வீடுகளையும், சொத்துகளையும் சூறையாடினார்கள். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மாத காலம் வீட்டிற்கு வெளியேயே தலை காட்டவில்லை. தமிழகம் முழுவதுமே மயான அமைதி.

இதையடுத்து, நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று, 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றதைக் குறிப்பிட வேண்டியது இல்லை. அவர் பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இப்போதைய மதுரை வானொலி நிலைய இயக்குநர் பாலசுப்ரமணியமும், ஊட்டி வானொலி நிலைய உதவி இயக்குநர் சங்கரனும் உடன் வர, புதிய முதல்வரைத் தொழில் நிமித்தம் நேர் காணல் செய்யச் சென்றோம்.

என்னிடம் ஜெயலலிதா இயல்பாகவும், இனிமையாகவும் நடந்து கொண்டார். எதிரே பணிவன்போடு நின்று கொண்டிருந்த எதிர்கால அமைச்சர், முத்துசாமியை உட்காரச் சொன்னார். இவர்தான், முன்னதாகக் கொடுக்கப்பட்ட வானொலிக் கேள்விகளுக்கு ஜெவுக்குப் பதில் எழுதிக் கொடுத்தவர் என்று அனுமானிக்கிறேன். சசிகலா நின்று கொண்டே இருந்தார். இந்த சசிகலா எனக்கு ஒரு காலத்து குடும்ப நண்பர். இவரது கணவர், தோழர் ம. நடராசன் செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், நான் மத்திய அரசின் செய்தி விளம்பர அதிகாரியாகவும் பணியாற்றினோம். எங்கள் வீட்டிற்கு இருவரும் வந்திருக்கிறார்கள். இந்த நடராசன் பிரபலமானதும், ஒரு தடவை என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்ட போது ‘கலைஞருக்கு வேண்டிய நீங்கள், தமிழ் மண்ணில், ஒரு புதிய கலாச்சாரத்திற்கு வித்திடலாமா’ என்று பொருள்படக் கேட்டேன். உடனே அவர் ‘ஆலமர நிழல் (ஆர்.எம்.வீ) கிடைக்கல. அதனால பனை மரத்து நிழல்ல (ஜெயலலிதா) அண்டி இருக்கேன்’ என்றார்.