பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

133



தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் திரைப்படங்களை, சிறந்த நடிகர், நடிகைகளை, இதரக் கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் அப்போதைய குழுவிற்கு முன்னாள் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியும், மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவருமான நீதிபதி கோகுல கிருஷ்ணன் அவர்கள் தலைவர். இவர்தான் 1960ஆம் ஆண்டு பாரிமுனையில் உள்ள ஒய்.எம்.சியே பட்டி மண்டபத்தில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு வழங்கியவர்.

இந்தக் குழுவில் மிகச் சிறந்த திரைப்பட வசனங்களை எழுதிய ஆருர் தாஸ், பசி என்ற கலைப்படத்தை எடுத்து தமிழ் திரையுலகத்தை ஒரு கலக்கு கலக்கிய இயக்குநர் துரை, சங்கீதத்தை இசையாக்கிய விசுவநாதன் - ராமமூர்த்தி, பாசமலர் போன்ற அற்புத படங்களை இயக்கிய பீம்சிங் அவர்களின் சௌமித்ரா, எனது இனிய நண்பர் சாருஹாசன் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இருந்தார்கள். இவர்கள், தமிழ்த் திரைப்படங்கள் ஒருவனை வீரனாக்குவதற்காக முப்பது பேரை பேடியாக்குவது என்ற திரைப்பட இலக்கணத்தோடு ஒத்துப் போனவர்கள். என்னால், அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை . நடிகர் விஜய் நடித்த ஒரு படத்தில் அவர் தனது தோழர்களோடு ஒரு ஏரியில் குளித்துக் கொண்டு ஜட்டியை கையில் தூக்கிக் கொண்டு அங்குமிங்குமாய் ஆட்டுவார். இதற்கு குழுவினடமிருந்து ஒரு சின்ன எதிர்ப்புக் கூட இல்லாதது, நான் அவர்களோடு ஒன்றிப் போகாத நிலைமையை வலுப்படுத்தியது. நான் அடிக்கடி கூச்சல் போடுவது வழக்கமாகி விட்டது.

கலைஞரிடம், இப்படி கூச்சல் போடுகிறவரை உறுப்பினராக போட்டு விட்டீர்களே என்று உறுப்பினர்களோ, அல்லது தோழர் அமிர்தமோ கேட்டு விடக் கூடாது என்பதற்காக குழுக் கூட்டங்களில் மெளனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்த என் வைராக்கியம் பிரசவித்து விட்டது. எப்படியோ எழுத்தாளர் பூமணி எழுதி இயக்கிய கருவேலம் பூக்களுக்கு சிறப்புப் பரிசை என்னால் வாங்கிக் கொடுக்க முடிந்தது.

அடுத்தாண்டு திரைப்பட தேர்வுக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட போது என்னைத்தவிர எல்லா உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தார்கள். நான் நடந்து கொண்ட விதமும், கோப