பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

என் பார்வையில் கலைஞர்



அந்த சமுத்திரத்திடமே சொல்வது என்பது உலக அதிசயங்களில் எட்டாவது. இவ்வளவுக்கும், அங்கே ‘கல்யாணம் இங்கே கலாட்டா’ என்ற எனது முதல் சிறுகதையின் தலைப்பை அந்தக் கட்டுரையில் தேடிப் பிடித்துத்தான் பார்க்க வேண்டும். கலைஞர் தேடிப் பிடித்து பார்த்திருக்கிறார்.

கலைஞரிடம் அழைப்பிதழை கொடுத்து விட்டு, அந்தச் சந்திப்பு போதையில் இருந்து மீளமுடியாமல் வீட்டிற்கு திரும்பினேன். உடனடியாக தினமணிக்கதிர் பொறுப்பாசிரியர் இளையபெருமாளிடம், கலைஞர் எனது கட்டுரையை பாராட்டியதை எடுத்துரைத்தேன். பிறகு ‘கலைஞர் இலக்கியவாதி என்ற முறையில் ஒரு குழந்தை. அவரது தலைப்பிரசவத்தையும் கேட்டு வாங்கி தினமணிக் கதிரில் பிரசுரிக்க வேண்டும்’ என்றேன். முற்போக்கு இளைஞரான இளையபெருமாளும் இந்த தலைப்பிரசவத்தில் எழுத்தாளர் சீனியாரிட்டி இல்லாமல் கலவையாக வருவதால், கலைஞரின் கட்டுரையையும் வாங்கிப் போட்டுகதிரைப் பெருமைப் படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆனாலும், கலைஞரின் கட்டுரை இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை கலைஞரிடம் வாங்கி அந்தத் தொடரை அவரது கட்டுரையை வைத்து முத்தாய்ப்பாக முடிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. இதைக் கலைஞரிடம் கேட்பது அற்பம். தினமணிக் கதிருக்கு மீண்டும் நினைவுப் படுத்துவது அசிங்கம்.

எந்தவித மின்னணு ஊடகங்களும் இல்லாமலே லட்சோபலட்சம் மக்களை அண்ணல் காந்தி கவர்ந்தது போல், லட்சோப லட்ச இலக்கிய ஆர்வலர்களை சாகித்திய அக்காதெமியின் ஆதரவு இல்லாமலே பெற்றிருப்பவர் கலைஞர். அப்படிப்பட்ட இலக்கிய மேதை என் கட்டுரையை படித்ததும் என்னை மேலும் வலுவாக எழுத ஊக்குவிக்கிறது. கூடவே, சகப் படைப்பாளிகளின் படைப்புகளை புறந்தள்ளாமல் படிக்க வேண்டும் என்ற உறுதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வள்ளலார் மக்கள் நேயப் பேரவையை கலைஞர் 11.7.99 அன்று மாலையில் கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார். நான் விழாவிற்கு தலைமை வகித்தேன். வள்ளலார் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் சென்னை கிறிஸ்துவ இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் அருட்தந்தை டாக்டர். தி.தயானந்தன் பிரான்ஸிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.