பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

என் பார்வையில் கலைஞர்


தம்பிரான் தோழர்
ஒரு
பன்முகப் பார்வை


கலைஞரை என்னளவில் தம்பிரான் தோழர் என்று அழைப்பதற்கான காரணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சைவசமயக் குரவர்களில் அப்பர் பிரானுக்கும், முழுமுதல் கடவுளான சிவபெருமானுக்கும் உள்ள உறவு நல்லதோர் ஆண்டான் அடிமைத் தன்மை வாய்ந்தது. திருஞான சம்பந்தருக்கும் அதே ஆண்டவனிடம் உருவான உறவு தந்தை மகன் போன்றது. சுந்தரருக்கு ஏற்பட்ட உறவோ தோழனுக்குத் தோழன் போல் இணையானது.

பெரிய புராணத்திலும், இதர தமிழ் புராண நூல்களிலும் வந்துள்ள இந்த மூவரிடமும் ஈசன் நடத்தியதாகக் கூறப்படும் திருவிளையாடல்கள் புராணப் பொய்களே. ஆனாலும், இவை பூஜ்யத்தைப் போல், மெய்மைக்கு வலிமை கொடுக்கும் பொய்கள்.

சுந்தரரை, அவரது திருமணத்தின் போது சிவபெருமான் தனது அடிமை என்று நிரூபித்து அழைத்துச் செல்கிறார். இதில் சுந்தரருக்கு விருப்பம் இல்லை. ஆனாலும், வேறு வழியில்லாமல் ஈசன் பின்னால் செல்கிறார். இதைப்போல், நானும் என்னையும் மீறி, கலைஞரின் தமிழிற்கு அடிமையானேன். சுந்தரர் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக அவருக்கு கண்கள் போகின்றன. எனக்கு, தொலைக்காட்சி வேலை போகிறது. சுந்தரருக்கு, சரியாக நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் கிடைக்கிறது. எனக்கு, வானொலி கிடைக்கிறது. சுந்தரர், அந்த ஊன்றுகோலை வைத்து சிவசொரூபமான லிங்கத்தின் மீது வீசியடிக்கிறார். நானும், வானொலியை வைத்தே கலைஞரை அடிக்கிறேன். சுந்தரர், தனது கோபத்தின் உச்சத்தில் சிவபெருமானை வாழ்ந்து போவீரே என்று அங்கத பாணியில் பதிகம் பாடினார். நானும் கலைஞரை தாக்கி, அறிக்கைகள் விடுத்தேன். இறுதியில்