பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

என் பார்வையில் கலைஞர்



இரவில் எத்தனை மணிக்கு படுத்தாலும், காலையில் ஐந்து மணிக்கெல்லாம் கலைஞர் எழுந்துவிடுவார் என்பார்கள். இதற்குப் பெயர்தான் கர்மயோகம். இதனால்தான் அவர் எதிரிகளின் ஆருடங்களை பொய்ப்பித்தபடி நடை போடுகிறார்.

கலைஞரிடம் குறை இல்லாமல் இல்லை. சமூக மாற்றத்திற்கு அவர் துடிக்கிற அளவிற்கு கலாச்சார மாற்றத்திற்கு அவர் அதிகமாக இயங்கவில்லை. இந்திய தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தமிழ் செத்துக் கொண்டு வருகிறது. தமிழ்ப்பண்பாடு நுனி நாக்கு பண்பாட்டிற்கு வழிவிடுகிறது. இதற்கு கலைஞர் அரசு ரீதியில் தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இலக்கியவாதி என்ற வகையில், தனது பேனா தமிழை மேலோங்கச் செய்தால் போதும் என்று மட்டுமே நினைக்கிறார். உலகமயமாதலில் கலாச்சார சீரழிவுகளை தவிர்க்க முடியாது என்று நினைக்கிறாரோ என்னமோ. ஆனாலும், இந்த சீரழிவுகளை அப்புறப்படுத்தாமல் தமிழை மேன்மைப்படுத்த முடியாது. கலைஞர் அமைத்த குறள்பீடம் இந்த சீரழிவுக்கு எதிரான ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று எதிர்பார்ப்போமாக.

கலைஞர் பதவியில் இல்லாதபோதும் அவரை எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருப்பேன் என்று தெரிவித்ததை குறிப்பிட்டு அவர் பேசுகையில், சோதித்துப் பார்க்க ஆசை என்றார்.

இந்த சோதனைக் கட்டத்தில்தான் இந்த நூலை கொண்டு வருகிறேன். கலைஞர் நிச்சயம் மீண்டும் முதல்வராவார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை . ஆனாலும், சாதியச் சக்திகள் அவரை வீழ்த்திவிடுமோ என்ற ஒரு அச்சமும் வருகிறது. அவர் வெற்றி பெற்ற பிறகு இந்த நூலைக் கொண்டு வந்தால் அது சமர்த்தாக கருதப்படும். அதற்காக அவர் தோற்பார் என்று தேர்தல் வரும் வரைக்கும் காத்திருக்கவும் கூடாது. எனவே, இந்தக் காலக் கட்டத்தில் இந்த நூல். முன்பெல்லாம் கலைஞர் ஆட்சியின் போது கலைஞரை பாதகமாக விமர்சிப்பார்கள். ஆனால், இப்பொதெல்லாம் கலைஞரை விட்டுவிட்டு அரசையும், அதிகாரிகளையும் தான் திட்டுகிறார்கள். பொதுமக்களுக்கு கலைஞரின் இந்த முதிர்ச்சி புரிந்திருக்கிறது. அவரது சிந்தனை முழுவதும் தமிழகத்தை