பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

என் பார்வையில் கலைஞர்


தான்
ஆடாவிட்டாலும்
சதை ஆடி...


1974 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை வானொலி நிலையத்தில் உள்ள நிகழ்ச்சிப் பத்திரிகையான வானொலிக்கு பொறுப்பாசிரியராக நியமிக்கப்பட்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை சென்னைக்கு மாற்றும்படி டில்லி மேலிட அதிகாரிகளை கெஞ்சியிருக்கிறேன். அவர்கள் கண்டுக்கவே இல்லை. அகிய இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு சில தடாலடி நடவடிக்கைகளை எடுத்து அமைச்சகத்தை அதிரச் செய்தேன். ஆனாலும், குடும்ப நிலவரம் காரணமாக நான் சென்னைக்கு வந்தாக வேண்டிய கட்டாயம். காலையில் மனு போட்டேன் தொலைந்தால் சரி என்பது மாதிரி மாலையிலே மாற்றல் உத்தரவை போட்டு விட்டார்கள். எங்கள் சகாக்களின் மகத்தான் வருத்தம் கலந்த வழியனுப்போடு சென்னை வந்து பொறுப்பேற்றேன். அப்போது இளைய ராஜா வானொலி நிலைய படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, கொண்டிருப்பார். அவருடைய புகைப்படத்தை அடிக்கடி வானொலி பத்திரிகையில் வெளியிட்டேன்.

1975 ஆம் ஆண்டு ஜூலை 25ம் தேதி நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. பிரதமர் இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேலிக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்த இந்திராகாந்தியை பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரியது அற்பத்தனமானது. இதற்காக இந்திராகாந்தி நெருக்கடி நிலையை பிரகடனப் படுத்தியது அசிங்கமானது.