பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

என் பார்வையில் கலைஞர்


ஆனால், எதிர்க் கட்சித் தலைவரான கலைஞரோ பாராமுகமாய் இருப்பதுபோல் தோன்றியது. இவர் வழங்கப்போன நன்கொடையை விடுதலைப் புலிகள், முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பயந்து மறுத்துவிட்டது எங்களுக்கு கலைஞருக்கு ஏற்பட்ட அவமானமாகத் தோன்றவில்லை. இது விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரமாகவே தோன்றியது. நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசமாக பேசுவதைத் தவிர, தி.மு.க அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. கலைஞரின் மௌனம் எங்களுக்கு கோபத்தைக் கொடுத்தது. கலைஞரை சந்தித்து, கர்நாடகத் தமிழர்களின் ஆதங்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.

1986ஆம் ஆண்டுவாக்கில், கோபாலபுரத்தில், கலைஞரின் வீட்டை, தேடிக் கண்டுபிடித்து வாசலுக்குள் போய்விட்டேன். வீட்டில் ஒரு ஈ, காக்கா கூட இல்லாதது போன்ற தோற்றம். கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அவர் அந்தக் கட்சிக்கு அரசர் ஆயிற்றே - தொண்டர்கள் அவரை கைவிட்டு விட்டார்களா என்ற சிந்தனையோடு, கண்களைத் துழாவியபோது-

ஒடிசலான, மங்களகரமான ஒரு அய்ம்பது வயது பெண்மணி தென்பட்டார். முன்னர் பார்த்தப் புகைப்படத்தை வைத்து அவர்தான் கலைஞரின் துணைவியார் தயாளு அம்மா என்பதை தெரிந்து கொண்டேன். என்னை எழுத்தாளன் என்றும் பெங்களூரில் அரசு வேலை பார்ப்பவன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு கலைஞரை பார்க்க வந்ததாக சொன்னேன். அப்போது அவர் பதிலளித்த வார்த்தைகளை என்னால் முழுமையாக ஒப்பிக்க முடியாது. ஆனால் இந்த பொருளில்தான் சொன்னார்

‘உங்களுக்குத் தெரியாதா? அவர போலீஸ் பிடிச்சுட்டு போய் ஜெயிலுல போட்டுட்டாங்க.’

ஒரு தலைவரின் மனைவி போராளியாகவும் இருக்கலாம், அதேசமயம் அந்தத் தலைவரை வழிபடுத்தும் குடும்பப் பெண்ணாகவும் இருக்கலாம். ஆய்ந்து பார்த்தால் இந்த இரண்டிற்கும் வேறுபாடே கிடையாது. தயாளு அம்மா, ஒற்றை நகையோடு, காலணா அங்குலப் பொட்டோடு என்னைப் பார்த்ததையும் கலைஞர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று மண்வாசனை தஞ்சை தமிழில் விளக்கியதையும் கேட்டுக் கொண்டிருந்த போதே எனக்கு அழுகை வந்துவிட்டது. சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி விட்டேன்.