பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

97



நானும் ஒரு தர்ம சங்கடமான கேள்வியைக் கேட்டேன். கலைஞருக்கு பயங்கரமான கோபம். அப்போது முகத்தில் மட்டும் எள்ளைப் போட்டிருந்தால், அது எண்ணெய் ஆகியிருக்கும். என்னை நேரடியாகப் பார்த்து, ‘ஆமாய்யா... இந்தியப் படை இலங்கைத் தமிழ்ப் பெண்களைக் கற்பழிச்சது. இப்பவும் சொல்றேன், உன்னால நியூஸ்ல போட முடியுமா’ என்று சவால் விடும் தோரணையில் கேட்டார். நானும் ‘இன்னைக்குச் சாயங்காலமே போடுறேன் சார்’ என்றேன். இந்த அமளியில் செய்தியாளர் கூட்டம் விரைவில் முடிவுக்கு வந்தது.

நான் ஆடிப் போய் விட்டேன். கலைஞர் இப்படி எந்த செய்தியாளரையும் ‘நீ, நான்’ என்று ஒருமையில் பேசியது இல்லை. இதர செய்தியாளர்களுக்கும் ஆச்சரியமாகி விட்டது. நான், திக்கு முக்காடி அந்த அறையை விட்டு அகல முடியாமல் நின்ற போது, கலைஞர் என் அருகே வந்தார். ‘நான் சொன்னதை அப்படியே போட உங்களுடைய வானொலி நெறிமுறைகள் இடம் தராதே. நீங்க எப்படிப் போடுவீங்க?’ என்று கேட்டார். நான், வாழப்பாடி ராமமூர்த்தியையோ, அல்லது எனக்குப் பெருமளவு உதவியிருக்கும் திருமதி. மரகதம் சந்திரசேகரையோ அணுகி 'ஆகவே, கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்று கலைஞரின் குற்றச்சாட்டிற்கு ஈடு கொடுத்து, அந்தச் செய்தியைச் சமச் சீராக்க முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு, ‘போட முடியும்’ என்றேன்.

கலைஞர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். அவர் அப்போது என் மீது சீறியது கொள்கை அடிப்படையில் அல்ல என்பதும். வீம்புக்காகப் பேசியது என்பதையும் புரிந்து கொண்டேன். அந்தச் செய்தியை நான் எனது செய்தி அறிக்கையில் சேர்க்கவே இல்லை.

சந்திரசேகர் அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள், மத்தியத் தகவல் ஒலி பரப்புத் துறைக்கும், உள் துறைக்கும் இணையமைச்சரான சின்ஹா சென்னைக்கு வந்திருந்தார். உள்துறை இணையமைச்சர் என்ற முறையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பரிசீலனை செய்வதற்கு, மாநில அமைச்சர்கள்- உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தினார். முதல்வர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முடிவடையும் போதுதான் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வரும், மத்திய அமைச்சர் சின்ஹாவும்

எ - 7