பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

முடியரசன்


இந் நாளில் சிறுவர்க்குக் கல்வி தொடங்கும் பழக்கம் இன்றும் கேரளத்தில் இருந்துவருகிறது. ‘துஞ்சத்து எழுத்தச்சன்’ என்னும் நல்லாசான் வாழ்ந்த இடம், துஞ்சன் பறம்பு என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இது கள்ளிக்கோட்டை ஒலவக்கோடு இருப்புப் பாதையில் உள்ள திரூர் என்னும் தொடர்வண்டி நிலையத்துக்கருகில் அமைந்துள்ளது. முதன் முதலாகக் குழந்தைகளுக்குக் கல்வி தொடங்கும் சடங்குக்கு ‘எழுத்திலிருந்து’ என்று பெயர். அவ் விழாவை இந்தப் பறம்பில் வைத்து நடத்தினால் பலமடங்கு பயன் உண்டு என்று மக்கள் நம்புகிறார்கள். ஆகவே, இங்கே சடங்குக்கு உரிய நாளிலே பெரும்பாலோர் வந்து சடங்கை நடத்துகிறார்கள். நவராத்திரியை ஒட்டி வரும் விசயதசமியன்று இங்கே பெருங்கூட்டம் கூடுகிறது. குழந்தைகளுடன் அவ்விடத்துக்கு வர இயலாதவர்கள் துஞ்சன் பறம்பிலிருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வந்து தங்கள் வீட்டில் வைத்துச் சடங்குக்குப் பயன்படுத்துவதும் உண்டு . (தினமணி-சுடர் அனுபந்தம் 30.11.1969-வி.எஸ்.நம்பூதிரிபாடு) சோழ நாட்டிற் பலவிடங்களில் ‘மாநோம்பு’, ‘மாநோம்புச் சாவடி’ என்னும் சொல் வழங்கும் இடங்களும் இன்றும் உண்டு. சேர, சோழ, பாண்டிய நாடுகளாக விளங்கிய தமிழகமெங்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வந்தது என்பது புலனாகிறது.

இத் திருவிழாவின் இறுதி நாளில் அம்பு போடுதல் என்ற ஒரு நிகழ்ச்சியும் நடைபெறும். அரசர் இருந்த நகரங்களில் அவ்வரசரே அரச வீதிகளின் வழியாக உலாப்போந்து குறித்த இடத்துக்கு வந்து அம்பு போடும் பழக்கம் உண்டு. ஏனைய ஊர்களில் ஆங்காங்கேவுள்ள கோவில்களிலிருந்து கடவுள் திருவுருவங்களுக்கு வில்லம்பு தாங்கிய திருக்கோலம் செய்வித்து, எழுந்தருளப் பண்ணி திருவுலாக் கொணர்வர். இறுதியில் குறிப்பிட்ட இடத்தையடைந்து அம்பு போடத் தொடங்குவர். கடவுளர் கையிலுள்ள வில்லும் அம்பும் அவ் வண்ணமேயிருக்கும். கடவுளர் அருகில் அமர்ந்திருக்கும் குருக்கள்மார் அத் தொழிலைச் செய்வர். மணியடிக்கும் கையில் வில்லையும் சூடத்தட்டேந்துங் கையில் அம்பையும் ஏந்தினால் எப்படியிருக்கும்? பாவம்! அவர்கள் எந்தக் காலத்தில் வில்லம்பு ஏந்தினர்? அதனால் அம்பெய்தவுடன் அவர்தம் காலடியிலேயே வீழும். அம்புகள் கூர்மையின்றியிருப்பதால் கால்களிற் காயமின்றித் தப்புவர்.

இதற்கு முன் கூறிய அனைத்தும் பிள்ளைப் பருவத்துக்குரியனவாக இருக்க அம்பு போடுதல் மட்டும் அரசர் செயலாகவும் கடவுளர் ‘பிரதிநிதி’ச் செயலாகவும் உளதே என்னும் எண்ணம் எழலாம். அரசர் தொடர்பும் ஆண்டவன் தொடர்பும் நாமாகப் பின்னர்ப் புகுத்திக் கொண்டவையே. அம்பு போடுதல் என்ற நிகழ்ச்சியும் சிறாரைப் பொறுத்ததே. பள்ளிச் சிறுவரும் ஏனைய சிறுவரும் அழகுத் திருவுருவங்களாகக் காட்சியளிப்பர். அந் நாளில் அச் சிறுவர் தங் கைகளிலே அம்புகள் இலங்கும். செல்வக் குடிச்சிறார்களாயின், பல்வகை