பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

முடியரசன்


வழியிற் கண்ட நண்பர் ஒருவர் விவரத்தைக் கேட்டு, அதனை வாங்கி, வெற்றிலைக் குன்று (வத்தலக்குண்டு) என்ற ஊரில் அஞ்சலிற் சேர்க் செய்தார். உரிய நாளில் உரியவர்க்குச் சென்றடைந்தது. சில நாளில் 1950இல் ‘திராவிட நாடு’ இதழில் முடிவு வெளியிடப்பட்டது. நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் மூவரும் நடுவராக இருந்த அப்போட்டியில் என் கவிதை முதன்மை பெற்றதாக அச் செய்தி கூறியது. பேருந்து நிலையத்திற் பிறந்த ‘அழகின் சிரிப்பு’ ஒரு சிறு வெள்ளிக் கிண்ணத்தை முதல் பரிசிலாகப் பெற்றுத் தந்தது. எனக்கு மகிழ்வைத் தந்த அதே கிண்ணம் எங்கள் வீட்டுக்குட் புகுந்த திருடனுக்கு ஒருநாள் உணவாக மாறியது. ‘முடியரசன் கவிதைகள்’ என்னும் நூலில் ‘அழகின் சிரிப்பு’ வெளிவந்துள்ளது.

பேருந்து நிலையத்திற் பிறந்த கவிதை ‘அழகின் சிரிப்பு’ இனி, பேருந்திலேயே பிறந்த கவிதையும் உண்டு. தென்னாட்டு இராசாராம் மோகன்ராய் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட தமிழறிஞர் சொ. முருகப்பனார் இராமாயணத்தில் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர். இராமகாதை என்ற பெயரில் திருத்தமான பதிப்பொன்று கொணர விரும்பிப் பெரிதும் முயன்று வந்தார். அதன் பொருட்டுப் பல்வேறு பதிப்புகளையும் ஏடுகளையும் துருவித் துருவி ஆய்ந்து வந்தார். தஞ்சை அரண்மனையில் சரசுவதி நூல்நிலையத்தில் மன்னரால் தொகுத்து வைக்கப்பட்டிருந்த ஏடுகளை அடிக்கடி சென்று ஆராய்ந்து வருவார். உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் நண்பருடன் உரையாடும் பொழுதும் இதே சிந்தனை, இதே பேச்சு, சுருங்கக்கூறின் அல்லும் பகலும் அதே நினைவுதான்.

அவர் இப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது நானும் புலவர் சிலரும் உடனிருப்பது வழக்கம். அக் காதையில் அவர்க்குள்ள ஈடுபாடும், திருத்தமான பதிப்பு வெளிவருவதற்காக அவர் பட்ட பாடும் என் உள்ளத்தில் நன்கு பதிவாகி விட்டன. ஒரு கால் நானும் என் நண்பர் தமிழண்ணலும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்குச் செல்ல நேர்ந்தது. பேருந்திற் செல்லும்பொழுது முருகப்பனாரைப் பற்றிப் பேசத் தொடங்கினோம். உந்து விரைவாக ஓடியது. உரையாடல் சுவையாக நடந்தது. பின்னர் உரையாடல் நின்றது. கவிதை பிறந்தது. திண்டுக்கல்லில் முத்து நல்லப்பன் என்ற நண்பர் இல்லத்துக்குச் சென்றதும் அவரிடத்தில் அக் கவிதையைச் சொன்னேன். அந் நண்பர் மகிழ்ந்து அவர் பெயர் பொறித்த மஞ்சள் நிற அஞ்சலட்டை ஒன்றைத் தந்து அப் பாடலை எழுதுவித்து முருகப்பனார்க்குச் செலவிடுத்தனர். அப் பாடலைக் கண்ட முருகப்பனார் பெருங்களிப் புற்று ‘நான் கம்பராமாயணத்தைத் தொட்டுப் படும்பாடு பெரிதுதான். ஐந்தாண்டுகளாக இது நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் சில நிமிடங்களில் உதித்த தங்கள் பாடல்கள் என்னுடைய ஐந்தாண்டுத் திகைப்புக்கு மாற்றாகி, மருந்தாகிவிட்டன’ என நெஞ்சு நெகிழ்ந்து எழுதியிருந்தார். அவரை மனமுருகச்