பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டுக் களியினிலே கவிதை

37


புறநானூற்றில் வருகிறது. அங்கே அவன் குழந்தையாகவே மாறிவிடுவான். அப் பாடலைப் படிக்கும்போது பாண்டியன் அறிவுடை நம்பி என்ற பெருமகன் நம் கண் முன் வரவே மாட்டான்; சிறு சிறு பச்சிளங் குழந்தைகளையேக் காண்போம். அந்தப் பிள்ளைக் கனியமுதங்களிடையே இருந்து உணவு உண்ணும் காட்சியும் நமக்குத் தோன்றும். பாடலைப் பார்ப்போம்.

“........................................
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை......"

(புறம். 188)

குழந்தைகளைப் பெற்றெடுத்து, அச் செல்வங்களின் திருவிளையாடல்களிலே திளைத்து இன்பங் காணுவோர் இப்பாட்டின் அருமைப்பாட்டை நன்கு உணர்வர். இதனைப் பாடியவன், பாடும் போது தன்னைப் பாண்டியனாகவும் அறிவுடை நம்பியாகவும் எண்ணியிருப்பின் இந்த அரிய பாடலை அவன் தந்திருக்க இயலாது. நாமும் பெற்று இன்புற்றிருக்க இயலாது. அவன் குழந்தைகளோடு குழந்தையாகவே ஆகிவிடுகிறான். அங்கே குழந்தை புலவன் என்ற இரண்டு பொருள்களில்லை. ஒன்று என்ற தன்மையைத்தான் காண முடிகிறது. மேலைநாட்டுக் கவிஞன் ஒருவன் கூறுகின்றான் "நான் சாளரத்தின் வழியாகப் பறவைகளைப் பார்க்கும்போது நானும் பறவையாகி விடுகிறேன்" என்று. கவிஞன் பறவையாகவே மாறும் போது குழந்தையாக மாறுவதில் வியப்புண்டோ? கவிகட்குக் "கூடு விட்டுக் கூடு பாயும்" வித்தை தெரியும் போலும்.

சீறிய நங்கை

இனி இளங்கோவைக் காண்போம். பாண்டியனிடம் வழக்காட வருவதற்காகக் கண்ணகியை அழைத்துச் செல்கிறார் இளங்கோ. கண்ணகி வழக்காடுவது இளங்கோவுக்காக அன்று. வழக்கு பாண்டியனுக்கும் கண்ணகிக்கும்தான். இளங்கோதான் கண்ணகிக்காக (காவியத்தில்) வாதாட வேண்டும் ஆனால் அவர் கண்ணகியைத்தான் பேசச் சொல்கிறார். கண்ணகியின் கணவன் கள்வன் எனப் பழி கமத்தப்பட்டான்; பழியுட னமையாது கொலையும் செய்யப்பட்டு விட்டான். அவளுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வருகிறது; சீற்றம் பெருக்கெடுத்து வருகிறது. அந்த நிலையில் வாய் மலர்கிறாள்.

"வாயிலோயே வாயிலோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!”

என்ற சொற்கள் கனலைக் கக்கிக்கொண்டு வெளி வருகின்றன. இந்தச் சொற்கள் வெளிவந்தனவோ இல்லையோ, வாதாட வந்த இளங்கோ வஞ்சிக்கே