பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேர்ப் பலா

65


மேலும் பாரதியார், “இந்தியாவில் சிற்சில ஜாதியாரைத் தவிர மற்றப்படியுள்ளோர், நாகரிகத் தேசத்தார் எல்லாரும் செய்கிறபடி, விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரைப் புனர் விவாகம் செய்துகொள்ளலாம்” என்று “இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை’ என்ற கட்டுரையில் உறுதிபடக் கூறுகிறார். இவ்வாறு துணிந்து கூறிய பாரதியார் தமது பாடலில் இக் கொடுமையைச் சாடாது விட்டதுதான் வியப்பாகவுள்ளது!

எனினும் பாரதியின் வழித்தோன்றலாகிய பாரதிதாசன், பாரதியார் விட்ட குறையைத் தொட்டு நிறைவு செய்துவிடுகிறார். ஆனால், பாரதிதாசன் வழிவந்த கவிஞர் கூட்டம் அந்த நெறியில் தொடர்ந்து செல்வதைக் காண இயலவில்லை.

பாவேந்தர் பாரதிதாசன் கைம்மையைப் பற்றிப் பாடும்பொழுது அப் பெண்களின் நிலைக்கு இரங்குகின்றார், உணர்ச்சி வயப்படுகின்றார்; அதற்கு அரண்களாக நிற்பவற்றை, தடைகளாக இருப்பவற்றை வெகுண்டெழுந்து சாடுகின்றார்; கைம்மைப் பெண்களின் சார்பில் வழக்கறிஞராக நின்று வாதிடுகின்றார்; துணிந்தெழுந்து மறுமணமும் செய்துவைக்கின்றார்.

“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே-இங்கு
வேரிற் பமுத்த பலா - மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்னே-குளிர்

வடிகின்ற வட்ட சிலா”

இஃது ஓர் ஆண் மகனை விளித்துக் கூறப்பட்டதாக இருப்பினும் குமுகாயத்தை நோக்கிக் கூறப்பட்டதாகவே கொள்ளுதல் வேண்டும் ‘ஏ, குமுகாயமே கைம்பெண்களின் நிலைமையைக் கண் விழித்துப்பார்! வேரிலே பழுத்துக் கிடக்கும் இனிய பலாக்கனி, வேண்டுவார் அற்று வீணே கிடப்பதைப் பார்! குளிர்ச்சி நிறைந்த முழுநிலவு, கொடியது என எண்ணப்படுவதைப் பார்! என்று உகப்பிவிடுகிறார். துயரந் தோய்ந்த இளகிய நெஞ்சிலிருந்து பொங்கி வெளிப்படும் நெட்டுயிர்ப்பு நம் செவியில் விழுகிறது.

தென்றல் உலவும் பூஞ்சோலை சீரற்றுக் கிடக்கிறது. நறிய பூமாலை “சீ” என்றிகழப்படுகிறது. நல்ல கனி நாடத்தகாதது என்றொதுக்கப்படுகிறது. எழில் வீணையின் இசை நஞ்சென்று வெறுக்கப்படுகிறது. பொன்முடி, சூடப்படாமல் மண்ணிற் கிடக்கிறது. தேன் நிறைந்த பொற்குடம் தொடத் தகாததென்று கூறப்படுகிறது. இந்த நாட்டிலே இளங் கைம்பெண்களின் நிலை,

“இவ்விதமாக இருக்குதண்னே-இதில்

யாருக்கும் வெட்கமில்லை”

என்று உணர்ச்சியற்றுக் கிடக்கும் குமுகாயத்தைச் சாடுகின்றார், சாடிய கவிஞர், அக் குமுகாயத்துக்கு வேண்டுகோளும் விடுக்கின்றார்.