பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ, நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி அணிந்து கோயிலுக்குப் போய்க்கொண்டு இருக்கிறாரே ஒரு பக்தர், அவர், "மனமே ஈசன் நாமத்தை வாழ்த்துவாய்' என்று பாடிக் கொண்டே போகிறார். இதோ, வாழ்க்கையில் வெறுப்புற்றுக் கையில் திருவோட்டுடன் கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கிறாரே ஒரு பண்டாரம், இவர் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி உனை மறந்தார்' என்று பாடுகிறார். இப்படி எல்லோரும் தம்மை மறந்து பாடிக் கொண் டிருக்கும் வேளையில்தான் நெஞ்சைப் பிளக்கும் அந்தச் செய்தி வருகிறது. பாகவதர் கைதானார்! அவ்வளவுதான்; தந்தி அறுந்த வீணைபோல் 'டங்கென்று ஒர் ஒலி எங்கிருந்தோ ஒலிக்கிறது; வீதிக்கு வீதி ஒலித்துக்கொண்டிருந்த பாட்டுக்கள் அத்தனையும் அப்படி அப்படியே நிற்கின்றன. ஒரு கணம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்; மறுகணம் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அழுகின்றனர். மேல் துண்டால் தன் முகத்தை மறைத்துக் கொண்டே திரும்புகிறார் ஒருவர்; கைக் குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே திரும்புகிறார் இன்னொருவர். பரஸ்பரம் கண்ணிரை மறைத்தாலும் ஒருவர் காதில் இன்னொருவருடைய விசும்பல் ஒலி விழுந்து விடுகிறது; 'இனி மறைத்துப் புண்ணியம் இல்லை என்று எல்லோரும் வாய் விட்டே அழுதுவிடுகின்றனர். யாருக்காக அவர் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த லட்சுமிகாந்தனுக்காகவா? இல்லை; பாகவதருக்காக, பாடப் பாடத் திகட்டாத அவருடைய பாடல்களுக்காக!