பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம் பாட்டுத்திறத்தால் இந்தப் பாரையே அழ வைத்த பாகவதர் அழுதாரா? இல்லை; அவர் அழவே இல்லை! கடைசி வரை அழவே இல்லை! அவரால் மட்டும் எப்படி அந்த சோகத்தைத் தாங்க முடிந்தது? அவரால் மட்டும் எப்படி அப்போதும் பழுத்த வேதாந்தியைப் போல சராசரங்கள் வரும் சுழன்றே என்ற பாடலைத் தமக்குள் முனகிக் கொண்டே போலீசாருக்குப் பின்னால் போக முடிந்தது? அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தக் கதை: உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? அசோக்குமாரில் கண்ணாம்பா நடனமாட, பாகவதர் பாடும் பாடல் இது. கண்ணாம்பாவைக் கண்டு யார் மயங்கினார்களோ இல்லையோ, பாகவதைரைக் கண்டு எல்லோரும் மயங்கினார்கள். அந்த மயக்கத்தில், 'பாகவதர்' எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றார்கள் தஞ்சாவூர்க் காரர்கள்; அதெல்லாம் ஒன்றும் இல்லை; அவர் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் என்றார்கள் திருச்சிக் காரர்கள். இரு சாரார் சொன்னதிலும் ஒரளவு உண்மை இருந்தது. பாகவதரின் தாயார் மாணிக்கத்தம்மாளுக்குத் தஞ்சாவூர், தகப்பனார் கிருஷ்ணமூர்த்திக்குத் திருச்சி, பிறந்தது தஞ்சையில்; வளர்ந்தது, வாழ்ந்ததெல்லாம் திருச்சியில். .* 'பிறந்த தேதி : 1.3.1910. ஆம், மாதக் கடைசியில் பிறந்து அவர்தம் தந்தையைச் சோதனைக்கு உள்ளாக்கவில்லை; மாதம் பிறக்கும் போதே அவரும் பிறந்துவிட்டார்!