பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 அப்படிப்பட்ட ரசிகர் ஒருநாள் நெல்லையில் நடந்த பாகவதரின் கச்சேரியை நேருக்கு நேராகக் கேட்க நேர்ந்தது; அவ்வளவுதான் - கச்சேரி முடிந்ததும் அவர் வீட்டுக்கு வந்தார்; சின்னப்பாவின் ரிகார்டுகளை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்தார்; சுத்தியலும் கையுமாக உட்கார்ந்து அவற்றை அடித்து நொறுக்கி, அவை மூலைக்கு மூலை சிதறி விழுவதைக் கண்டு சிரித்தார், சிரித்தார், சிரித்துக் கொண்டே இருந்தார். 'கச்சேரிக்குப் போகும்போது நன்றாய்த்தானே போனார்? திரும்பிவந்ததும் இவருக்கு என்ன வந்துவிட்டது?’ என்று தெரியாமல் வீட்டிலிருந்தவர்கள் திகைத்தார்கள்; ஒருவேளை சித்தப் பிரமையாக இருக்குமோ? என்று அவரைச் சந்தேகக்கண்ணோடு பார்த்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாகத் திரு என்.எஸ். கிருஷ்ணன், பாகவதருடன் அங்கே வந்தார். அவருக்கு ஏற்கெனவே அந்த ரசிகரைத் தெரியும்; இருவரும் நண்பர்கள் கூட. எம்.கே.டிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் என்.எஸ்.கே. அங்கே சிதறிக் கிடந்த கிராமபோன் பிளேட் சில்லு களைக் கண்ட பாகவதர், 'இதெல்லாம் என்ன? ' என்று ஒன்றும் புரியாமல் கேட்டார். 'ரிகார்டுகள் ஹஹஹஹ்ஹா... பி. யு. சின்னப்பா வின் ரிகார்டுகள்!' என்று அப்போதும் சிரித்தார்.அந்த ரசிகர். 'அடாடா இதை ஏன் இப்படி உடைத்து எறிந்தீர்கள்?" 'உங்கள் கச்சேரியை முதன்முறையாகக் கேட்டேன்; அதற்குப்பின் இவருடைய பாடல்களைக் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் உடைத்தெறிந்துவிட்டேன்'